2024 தமிழ்நாடு அரசியல் களம்: பிரமோஷன் டூ எக்ஸ்ப்ளோஷன் வரை!
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் சிறிதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவில் பிரமோஷன், அதிமுகவில் எமோஷன், விஜய்யின் Explosion என பரபரப்பாகவே சென்றது 2024. அப்படி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை பின்னோக்கி பார்க்கலாம்...
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசியலில் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை, அந்தவகையில் 2024 ஆம் தொடக்கத்தில் சட்டப்பேரவை கூடியதில் இருந்தே அரசியல் பரபரப்பு கூடியது. ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையின் தொடக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு மற்றவற்றை தவிர்த்தார் ஆளுநர் ரவி. இது சர்ச்சையானது.
இதையடுத்து, அரசு தயாரித்த உரை மட்டும் பேரவைக் குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பேரவையிலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆளுநர் ரவி.
தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய்க்கு பெரு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் இருக்கை பிப்ரவரியில் மாற்றப்பட்டு எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சந்தித்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மக்களவைத் தேர்தல். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையில் புதிய கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனைப் போட்டி நிலவியது.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அதிமுக கூட்டணி 23.05 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 18.28 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் 8.2 சதவீத வாக்குகளையும் பெற்றன.
மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தால், விடுதலைச் சிறுத்தை கட்சியும், நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உயர்ந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நல குறைபாடு காரணமாக மரணமடைய, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்லிவிட்டார்கள். இறுதியில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி வாகை சூடினார்.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி அரசியல் களத்திற்குள் நுழைந்தார் நடிகர் விஜய். முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ’விஜய் மக்கள் இயக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் என்பதால், அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாகக் கூறி அரசியலுக்குள் அடியெடுத்து வைத்ததாக விஜய் அறிக்கை வெளியிட்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.
*2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடத்தினார், இது தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார்.
பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில், அவரை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுத்தார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்த நிலையில், பொன்முடிக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
செப்டம்பரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடைப்பெற்றது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கொறடாவாக இருந்த கோ.வி.செழியன் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 11 ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தபடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எவவேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்” என்ற நூல் வெளியிடப்பட்டது,
வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், எல்லாரும் ரேங்க் வாங்கிட்டு கிளாஸ் விட்டு போக மாட்டேனு இங்கேயே இருப்பவர்கள் என்றும் பேசி இருந்தார். அதோடு, துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு, கலைஞர் கண்ணுலயே விரல்விட்டு ஆட்டினவர் என்று சொல்லி, அவரை சமாளிப்பதற்கு “ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டு யூ” என்று ரஜினிகாந்த் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
நாதகவில் இருந்து கொத்து கொத்தாக நிர்வாகிகள் வெளியேற்றம் நடந்த நிலையில், திடீரென ரஜினியை சந்தித்து பேசினார் சீமான். ரஜினியுடனான சீமான் சந்திப்பு பாஜக – நாதக கூட்டணிக்கான அடித்தளம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தன.
*விஜய்யும் திருமாவளவனும் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சியை திருமா புறக்கணித்தது, பிறப்பால் ஒருவர் தலைவராகிவிட முடியாது என்று ஆதவ் அர்ஜூனா கூறியது , திருமாவிற்கு கூட்டணி கட்சி அழுத்தம் உள்ளது என விஜய் கூறியது விசிக - திமுக கூட்டணிக்குள் சலச்சலப்பை ஏற்படுத்தியது.
*தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை தற்காலிகமாக நீக்கியது. இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கோவை, நெல்லை மேயர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் அவர்கள் ராஜினாமா செய்யப்பட்டு புதிய மேயர்கள் நியமனம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார் மேயர் மகாலட்சுமி யுவராஜ்.
டிசம்பர் 15 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் எடப்பாடி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு, கல்வி மாநிலப் பட்டியல் உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனைக் கண்டித்து ’திமுக ஆட்சியைக் கவிழ்க்கும் வரை செருப்பு போட மாட்டேன்’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சபதமிட்டார். தொடர்ந்து, கோவையில் உள்ள தனது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவர் அறிவிப்பு விவகாரத்தில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. “இது என் கட்சி நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் …விருப்பமுள்ளவர்கள் இருக்கலாம்.. இல்லையென்றால் வெளியே போகலாம்” என ராமதாஸ் சொல்ல, அன்புமணி கூட்டத்தைவிட்டு வெளியேறினார்.
What's Your Reaction?