மாணவர்களுக்கு திமுக போதைப்பொருளை சப்ளை செய்கிறது- செல்லூர் ராஜு காட்டம்
திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் அதிமுகவின் 53-வது துவக்க விழாவையொட்டி 53 அடி உயர கழக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சார்பில் கொடி மரத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில் ஏற்கனவே உள்ள 25 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றி நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்:-
வகுப்பறையில் பெண் ஆசிரியர் படுகொலை செய்யப்படுகிறார். நீதிமன்ற வாசலில் வழக்கறிஞர் வெட்டப்படுகிறார். தமிழக காவல்துறை இன்றைக்கு சந்தி சிரிக்கிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் திமுக அரசிற்கு கொட்டு வைக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணை தேவை என கூறி இருக்கிறார்கள். எஸ்.பி (SP) அலுவலகம் அருகே உள்ள போது கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று கூறினார்.
தொடர்ந்து, கஸ்தூரியை பிடிப்பதற்கு காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து அவரை டெல்லியில் பிடித்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜியை பிடித்து ஒராண்டு காலம் சிறையில் அடைத்திருந்தாலும் அவரது சகோதரனை இதுவரை தமிழக காவல்துறையினர் பிடிக்கவில்லையே.? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விஜயுடன் கூட்டணி குறித்து எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாரா.? ஒரு இளைஞர் கட்சியை தொடங்குகிறார், அதற்கு நாங்கள் வரவேற்பளித்தோம் என்று கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை கொடுத்தோம். ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சியில் பீர், கஞ்சா போதைப்பொருள் ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்கிறது என்றும் 53 அடி உயர கழகக் கொடியை ஏற்ற இருந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் 25 அடி உயரத்தில் கழகக் கொடியை ஏற்றி வேதனையில் இருக்கிறோம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?