மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. மதுரை to சென்னை நீதிப்பேரணி.. அண்ணாமலை அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளியான ஞானசேகரன் திமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று பல கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக-வினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக போன்ற கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். தொடர்ந்து , தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து நேரில் சந்தித்து சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து நீதிப்பேரணி நடைபெறவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில் மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழ்நாடு பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?