Minister Udhayanidhi Stalin on Car Race Sponsors Issue : ஃபார்முலா 4 கார் பந்தயம், கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன. சுமார் 40 கோடி ரூபாய் செலவில் இந்த கார் பந்தய போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஃபார்முலா கார் ரேஸ் போட்டிகள் என்றாலே இதுவரை வெளிநாடுகளில் மட்டும் தான் நடைபெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், முதன்முறையாக சென்னையில் இப்படியொரு போட்டியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.
அதேநேரம் சென்னையின் சிட்டி உள்ளே இப்படியொரு ரேஸ் போட்டியை நடத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தீவுத் திடல், அண்ணா சாலை என முக்கியமான பகுதிகளில் சுமார் 3.5 கிலோ மீட்ட தூரத்திற்கு இந்த கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதோடு, மருத்துவமனைகள் இருப்பதையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டியிருந்தார். அதேபோல், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு, திமுகவினர் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
அதேபோல், டிசம்பரில் நடக்கவிருந்த கார் போட்டியை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக அப்போது நடக்கவிருந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் கைவிடப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில் இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ராணுவம், கடற்படை ஆகியோரிடம் இருந்து தமிழக அரசு தடையில்லா சான்றிதழை பெற்றது. மேலும், சென்னை நீதிமன்றமும் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கியது.
இதனையடுத்து தற்போது ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார் பந்தயம் குறித்து குற்றம்சாட்டியிருந்தார். அதில், ஃபார்முலா 4 கார் பந்தய நிகழ்ச்சிக்காக திமுகவினர் கட்டாய வசூல் செய்துவருவதாக தெரிவித்துள்ளார். மேலும், நிதி வழங்கவில்லை என்றால், பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தொழிலதிபர்களை திமுகவினர் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் படிக்க - வயநாட்டில் எங்கும் மரண ஓலம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கார் பந்தய விவகாரத்தில், திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்த நல்ல வரவேற்பு உள்ளதாகவும், அதற்கான ஸ்பான்ஸர்களும் எதிர்பார்த்தளவில் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், அண்ணாமலை குற்றம்சாட்டுவது போல், மிரட்டி பணம் வாங்கிய ஸ்பான்சர்களில் யாராவது ஒருவரின் பெயரை சொன்னால் நன்றாக இருக்கும் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் முதன்முறையாக நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம், இரவு நேரத்தில் நடக்கவிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 200 கிமீ வேகத்துல சீறிப்பாயும்@Udhaystalin | @SportsTN_ | #F4Chennai | #ChennaiFormulaRacingCircuit |@Atulyamisraias
— KumudamNews (@kumudamNews24x7) July 30, 2024
| #MeghanathaReddyIAS | #kumudamnews24x7 pic.twitter.com/THVzF82wAk