Wayanad Landslide : வயநாட்டில் எங்கும் மரண ஓலம்! கலங்கி நிற்கும் கடவுளின் தேசம்.. கரம் கொடுத்த மோடி, ராகுல்

PM Modi on Wayanad Landslide in Kerala : வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேரள முதலமைச்சரிடம் மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.

Jul 30, 2024 - 11:50
Jul 30, 2024 - 13:04
 0
Wayanad Landslide : வயநாட்டில் எங்கும் மரண ஓலம்! கலங்கி நிற்கும் கடவுளின் தேசம்.. கரம் கொடுத்த மோடி, ராகுல்
PM Modi on Wayanad Landslide in Kerala

PM Modi on Wayanad Landslide in Kerala : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் வயநாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவும் பல நூறு உயிர்களை மண்ணோடு மண்ணாக புதைய வைத்துள்ளது. தூக்கத்தில் இருந்து விழிக்காமலேயே பலர் ஜலசமாதியாகியுள்ளனர். எங்கும் மரண ஓலம் கேட்பதால் கடவுளின் தேசமான கேரளா மாநிலம் கலங்கி நிற்கிறது. கேரள முதலமைச்சரை பிரதமர் மோடியும் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலச்சரிவு மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

கேரள மாநில வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை என்ற இடங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதையுண்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வயநாடு, நிலச்சரிவு தொடர்பாக அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1 மணிக்கு முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை அடுத்து 3 மணி நேரத்தில் சூரல் மலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அட்டமலையில் இருந்து முண்டகை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கடைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

வைத்திரி தாலுக்கா, வெள்ளேரிமலை கிராமம், மேப்பாடி பஞ்சாயத்தில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சூரல்மலையிலிருந்து முண்டகை வரையிலான சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிலச்சரிவில் சிக்கியவர்களையும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கேரளாவில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்ட அத்தனை பேரிடர் மீட்பு குழுக்களும் ஒட்டுமொத்தமாக சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தற்போதைய தகவல்களின் அடிப்படையில் வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள், பாலம் ஆகியவலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளது. இந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிரமாக பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே கேரள முதலமைச்சரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலச்சரிவு மீட்பு பணிகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில்  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

மீட்பு பணிகள் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்ததாக கூறியுள்ளார். இதனிடையே வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரழந்தவருகளுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதே போல காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய  நிலச்சரிவால் மிகவும் வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். 

இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்பு பணியை தீவிரப்படுத்த கேரள அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் வயநாடு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow