தொழில்நுட்பம்

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ் ஆப்? நீதிபதி போட்ட கண்டிஷன்!

வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ் ஆப்? நீதிபதி போட்ட கண்டிஷன்!
Whats app
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவுப் பகிர்வு விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது.

அபராதமும் மேல்முறையீடும்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது மேலாதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பயனர்களின் தரவுகளை வணிக ரீதியாகச் சுரண்ட முயன்றதாகக் கூறி, இந்தியப் போட்டி ஆணையம் (CCI) அந்த நிறுவனத்திற்கு ரூ. 213.14 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

"தரவுத் திருட்டிற்கு இது ஒரு நாகரிகமான வழி"

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மக்களின் தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதோடு வணிக ரீதியாகச் சுரண்டப்படுவதாக வாதிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "தரவுப் பகிர்வு என்ற பெயரில் நாட்டு மக்களின் தனியுரிமையுடன் விளையாட முடியாது. இது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான ஒரு நாகரிகமான வழி; அதைச் செய்ய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

வெளியேறுங்கள் என அதிரடி எச்சரிக்கை

தொழில்நுட்ப நிறுவனங்களின் தனியுரிமை விதிமுறைகள் மக்களுக்குப் புரியாத வகையில் தந்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "இந்த நாட்டின் அரசியலமைப்புக் கோட்பாடுகளை உங்களால் பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்" என்று மெட்டா நிறுவனத்திற்கு அதிரடி எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மக்களின் தரவுகளைப் பகிர மாட்டோம் என உறுதிமொழி அளிக்கத் தவறினால், நீதிமன்றமே கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் தெரிவித்தனர்.

பிப்ரவரி 9-ல் இடைக்கால உத்தரவு

இந்த வழக்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தையும் ஒரு தரப்பாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், மெட்டா மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் இது குறித்துப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர். இந்த வழக்கின் மிக முக்கியமான இடைக்கால உத்தரவு வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வாட்ஸ்அப் செயலியின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.