ஆசை வார்த்தை கூறி லட்சங்களில் மோசடி.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த கொடூரம்
சக ஊழியர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை மோசடி செய்ததோடு, அந்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏழுமலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் என்ற நபரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணேஷ் குமார், சக ஊழியர்களிடம் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், நீங்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தர என்னால் முடியும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவரது நண்பர்கள் தாங்கள்
பணிபுரியும் நிறுவனத்தின் கணக்கு உள்ள தனியார் வங்கியில் மாத தவணைக்கு தலா 10 லட்சத்திற்கு மேல் ஒவ்வொருவரும் தனித்தனியாக கணேஷ் குமாருக்கு லோன் பெற்று தந்துள்ளனர்.
லோன் பெற்றுக் கொடுத்த சில மாதங்கள் கணேஷ்குமார் மாத தவணையை சரியாக கட்டி வந்துள்ளார். பின்னர் காலதாமதம் ஏற்படுத்தியுள்ளார். அது குறித்து லோன் பெற்று தந்த ஊழியர்கள் கணேஷ் குமாரிடம் கேட்டபோது இன்னும் முதலீடு செய்த இடத்தில் சரியாக பணம் வரவில்லை. நானே மற்றவர்களிடம் கடன் வாங்கிதான் உங்கள் தவணை பணத்தை கட்டி வருகிறேன். எனவே இன்னும் சிறிது காலத்தில் நல்ல முதலீடு வந்த பிறகு அனைவருக்கும் வட்டியும், முதலுமாக கொடுத்து விடுகிறேன் என்று கூறி சிறிது காலத்தில் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று தலைமறைவாகி உள்ளார்.
இதில் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் 10 லட்சம் ரூபாய் லோன் வாங்கி கொடுத்து ஏமாந்துள்ளார். தாம்பரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கணேஷ் குமாருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வந்து பதிலளிக்கும் படி தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காவல் நிலையம் வந்த கணேஷ் குமாரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பண மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் கணேஷ்குமார், தான் ஏமாற்றிய பணத்தில் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தாகவும், ட்ரீம் 11 என்கிற ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடி, அதில் பல லட்சங்களை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?