76-வது குடியரசு தினம்.. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் மரியாதை
சென்னையில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்று மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர் நடைபெறும் அணி வகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொள்வார்
குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
தேசிய கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த முன்னணி தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.
தொடர்ந்து, கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தித்திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதான நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனி மாவட்டம் முருகவேல் என்பவருக்கு வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கம்:
- விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்னகாமணன்
- விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுகா சட்டம் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகா மார்க்ஸ்
- திருச்சி மாவட்டம் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் கார்த்திக்
- சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா
- சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது
- மதுரை மாநகரத்திற்கு முதல் பரிசு.
- திருப்பூர் மாநகரத்திற்கு இரண்டாம் பரிசு.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
What's Your Reaction?