தமிழ்நாடு

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?
புதிய மருத்துவ கல்லூரிகள்

சென்னை: இந்திய அளவில் தமிழ்நாடு கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், உயர் மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம் அல்லது ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க தமிழ்நாடு அரசு பரீசிலித்து வந்தது.

ஒரு மாநில அரசு தங்கள் மாநிலத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டுமானால் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்தபிறகு மாநிலத்தில் மருத்துவக்கல்லூரிகள் அமைத்துக் கொள்ளலாம்.

ஆனால் தமிழ்நாடு அரசு , நிதிச் சிக்கல் காரணமாக இந்த ஆண்டு, புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்பில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பங்களை பெற்றது. 

அப்போது தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ''10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்ற விதிமுறை 2023ம் ஆண்டு  அறிவிக்கப்பட்டது. தற்போது அதனை மாற்றி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் 2024-25 ம் கல்வியாண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் 2025-26ம் கல்வியாண்டில் இருந்து 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் எம்பிபிஎஸ் படிப்பில் 100 இடங்களுக்கு அனுமதி என்ற விதிமுறை கட்டாயம் பின்பற்றப்படும்'' என்று கூறியிருந்தது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்காக விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு, கடந்த ஏப்ரல் மாதம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒரு அரசு மருத்துவ கல்லூரியும் தொடங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக பழைய விதிமுறையை தொடர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

இதன் காரணமாகவும், தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லாத காரணத்தாலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பிக்கவில்லை என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.