திருப்பதி தரிசனத்திற்கு பத்தாயிரம் ரூபாயா..! பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல்
திருப்பதில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலமாக ஆன்லைன் டிரேடிங் விளம்பரங்கள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் சம்பாதிப்பது போன்ற விளம்பரங்கள் மூலம் மக்களிடம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது இதேபோன்று மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து தருவதாக கூறி சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி நூதன முறையில் சமூக வலைதளத்தில் மோசடி நடைபெறுவதாக சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையின் துணைத் தலைவராக செயல்பட்டு வரும் பெண் மருத்துவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பேஸ்புக் விளம்பரங்களை பார்த்துக் கொண்டு வந்தபோது திருமலா திருப்பதி கோவிந்தா என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை பார்த்ததாகவும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக திருப்பதியில் நடக்கும் பல்வேறு தரிசனங்களை காண்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக அந்த சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அந்த பெண் மருத்துவர், சமூக வலைதள பக்கத்தை நிர்வகிக்கும் நபரிடம் பேசியுள்ளார். அந்த நபர் தனது பெயர் குமார் என்றும் மேல் திருப்பதியில் அவர் வசித்து வருவதாகவும், திருப்பதி தேவஸ்தானத்திற்காக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு பெண் மருத்துவர் சமூக வலைதளத்தின் மூலம் பேசிய குமாரிடம் கேட்டுள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பாளர் மூலமாக கடிதம் பெற்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவாதாகவும், அதற்கு ஒரு நபருக்கு தலா 10 ஆயிரம் செலவாகும் என்று குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் மருத்துவர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா பத்தாயிரம் என 40 ஆயிரத்தை குமார் அனுப்பிய ஸ்கேன் கோடை பயன்படுத்தி அனுப்பியுள்ளார். அப்போது, அந்த ஸ்கேன் கோடில் ராஜேஷ் என பெயர் இருந்ததால் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, அவர் முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஊழியர் எனவும், பணி இடமாற்றம் ஆன பிறகு அவரது பெயர் இன்னும் மாற்றப்படவில்லை என குமார் கூறியதாக பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தரிசனத்திற்கான குறுஞ்செய்தி வரும் என தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும் வராததால் சந்தேகப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரை வாட்ஸ் அப் (whatsapp) மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் மருத்துவர், சமூக வலைதள பக்கம் மற்றும் தான் தொடர்பு கொண்ட நபரின் செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து புகார் அளித்துள்ளார்.
பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமூக வலைதள பக்கத்தின் ஐபி முகவரி மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாரப்பூர்வமாக திருப்பதியில் உள்ள தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக் செய்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்றும் இது போன்ற போலி சமூக வலைதளப் பக்கத்தை நம்பி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?