மின் உற்பத்தி நிறுவனங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டு... சோதனையில் குதித்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!
சென்னையில் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (நவ. 11) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்பான 6 மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை சாலையில் உள்ள OPG Power & Infrastructure Private Limited கார்ப்பரேட் அலுவலகம், ஆர்.ஏ புரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் இயக்குநரான அரவிந்த் குப்தாவின் வீடு, தேனாம்பேட்டையில் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள கவுஷிக் சோலார் கம்பெனி உரிமையாளரான கவுசிக் என்பவரது வீடு, இதைத்தவிர கீழ்பாக்கம் பர்னபி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலக்கத்துறை சோதனையானது இன்று (நவ. 11) காலை முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக OPG Power & Infrastructure Private Limited சோலார் மின் உற்பத்தி நிறுவனத்தை மையப்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் ஆர்ஏ புரத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்த் குப்தாவின் வீடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகமானது மின்சார தட்டுப்பாடு காரணமாக தனியார் நிறுவனங்களுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு மின் வினியோகம் தொடர்பான நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனங்கள், சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்த ஒப்பந்தமானது போடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் OPG Power & Infrastructure Private Limited நிறுவனம் ஆகும். இதன் மூலம் 414 மெகாவாட் நிலக்கரி மின்சாரமும், 64 மெகாவாட் சோலார் மின்சாரமும் வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் நிர்ணயித்த அளவைவிட அதிக விலைக்கு தமிழக அரசு மின்சாரம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம், சட்ட விரோத அந்நிய முதலீடு ஆகியவை நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல OPG Power & Infrastructure Private Limited நிறுவனமானது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் அது தொடர்பாக ஏதேனும் மின்சார ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முழுமையான சோதனைக்கு பின்னரே தமிழ்நாடு மின் விநியோக ஒப்பந்த முறைகேட்டின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறதா? அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் அம்மாநில மின் விநியோக ஒப்பந்த முறைகேட்டின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறதா? என்பது குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?