பீப் கடை விவகாரம் : பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு.. பொதுமக்கள் சாலை மறியல்..!
பீப் கடை விவகாரகத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, கணபதி உடையாம்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க ஓ.பி.சி அணியின் கோவை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா - ரவிக்குமார் என்ற தம்பதியினர் தள்ளுவண்டி கடையில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தக் கடைக்கு நேற்று புதன்கிழமை பா.ஜ.க ஓ.பி.சி அணியின் கோவை மாவட்ட செயலாளரான சுப்பிரமணி (36) , அந்த பகுதியின் வார்டு உறுப்பினரான ராமமூர்த்தி என்பவருடன் அங்கு சென்று, அந்தப் பகுதியில் மாட்டிறைச்சி தொடர்பான உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என்று வற்புறுத்தியதுடன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இடையே ஆபிதா - ரவிக்குமார் தம்பதியினருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திராவிட தமிழர் கட்சி, காங்கிரஸ் சிறுபான்மைப பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தள்ளுவண்டி கடை தம்பதியினரை மிரட்டிய சுப்பிரமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாழக்கிழமை துடியலூர் காவல் நிலையத்திலும், கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தரை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தனர்.
இதை அடுத்து சுப்பிரமணி மீது சட்டத்திற்கு புறம்பாகத் தடுத்தல், மோதலையும், விரோதத்தையும் தூண்டும் வகையில் செயல்படுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அந்த பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் தேவராஜ் தலைமயிலான காவல் துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட சுற்று அளவுக்குள் அசைவ உணவு தொடர்பான கடைகளை அனுமதிக்கக் கூடாது எனவும், பா.ஜ.க நிர்வாகி சுப்பிரமணி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும் ஊர் மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதியைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
What's Your Reaction?