டைம் டிராவல் 2024: உலகை சுற்றி... 50 முக்கிய நிகழ்வுகள்..

ஜப்பான் நிலநடுக்கம் முதல்..இஸ்ரேல் போர் நிறுத்தம் வரை.. 2024ம் ஆண்டில் இந்த உலகம் கண்ட 50 முக்கிய நிகழ்வுகளை இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்..

Dec 31, 2024 - 20:00
Dec 31, 2024 - 19:15
 0
டைம் டிராவல் 2024: உலகை சுற்றி... 50 முக்கிய நிகழ்வுகள்..

1. 2024 ஆம் ஆண்டு தொடக்கமே உலகை உலுக்கிவிட்டு தான் பிறந்தது. ஜனவரி 1ம் தேதி புது வருடம் தொடங்கிய உடனேயே ஜப்பானில் உள்ள நோடோ தீவில் நிலநடுக்கம் தாக்கியது.  ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

2. ஜனவரி 1ம் தேதி எஸ்டோனியாவில் தன்பாலின திருமணத்தை சட்டம் அமல்படுத்தப்பட்டது. பிரதமர் காஜா கல்லாஸ் தலைமையிலான அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியது.

3. ஜனவரி 2ம் தேதி தென்கொரியாவின் எதிர்கட்சி தலைவர் லீ ஜே மியுங் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.  லீ ஜே மியுங் கழுத்தில் கத்தியை வைத்து குத்திய 50 வயது நபரை சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்தனர்.

4. ஜனவரி 11ம் தேதி வரை ஜாம்பியாவில் 300 பேர் காலரா நோய் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நகரப் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு குடியேற மக்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

5. ஜனவரி 19ம் தேதி ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவுக்கு பிறகு 5வது நாடாக நிலவில் கால் பதித்தது ஜப்பான். 

6. மார்ச் 7ம் தேதி நேட்டோ அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டது சுவீடன். 200 ஆண்டுகளுக்கும் மேலாக போர்காலங்களில் நடுநிலை நிலைபாட்டை எடுத்து வந்த ஸ்வீடன், அதனை உடைத்து நேட்டோ அமைப்பில் இணைந்தது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளானது.

7. மார்ச் 17ம் தேதி ரஷ்ய அதிபர் தேர்தலில் ஏற்கனவே அதிபராக இருந்த விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.  இதன் மூலம், ரஷ்ய வரலாற்றிலேயே கடந்த 200 ஆண்டுகளில்  நீண்ட காலம் பதவியில் இருந்த பெருமையை பெற்றார் புதின்.

8. மே 24ம் தேதி பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலச்சரிவு 670க்கும் மேற்பட்டோரை விழுங்கியது. மேலும் 2,000க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மையத்தின் இயக்குநர் அப்போது தெரிவித்திருந்தார். 

9. மே 31ம் தேதியன்று தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததை வெளியில் சொல்லாமல் இருக்க நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்-க்கு  டிரம்ப் கொடுத்த பணத்தை, சட்ட செலவுகள் என தேர்தல் ஆவணங்களில் தாக்கல் செய்ததால், முறைகேடு செய்ததாக டொனால்டு டிரம்ப்பை குற்றவாளி என நியூயார்க் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.

10. ஜூன் 2ம் தேதி நடைபெற்ற மெக்சிகோ அதிபர் தேர்தலில் மொரேனா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கிளாடியா ஷீன்பாம் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி நிலைபாட்டை கொண்ட இவர், நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆவார்.  

11. ஜூன் 6ம் தேதி அன்று, பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசா அனுப்பிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது. 


12. ஜூன் 13ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டிரம்ப்பின் காதில் காயம் ஏற்பட்டது.

13. ஜூன் 24ம் தேதியோடு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 100 இந்தியர்கள் உள்பட 1,300 பேர்  கடும் வெயிலால் உயிரிழந்தனர்.

14. ஜூலை 16ம் தேதி ஓமனில் நடுக்கடலில் 117 மீட்டம் நீளம் கொண்ட prestige falcon என்ற எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. அப்போது கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் மாயமாகினர்.

15. ஜூலை 19ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் முடங்கியது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் தொழில்நுட்ப செயல்பாடுகள் முடக்கம், விமானங்கள் ரத்து ஆகியவை நடந்தது.

16. ஜூலை 20ம் தேதி வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததால் சுமார் 105 பேர் உயிரிழந்தனர். இதனால் ஊரடங்கை அமல்படுத்தியது அந்நாட்டு அரசு. 

17. ஜூலை 21ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் அதிபர் ஜோ பைடன். தேர்தல் விவாத நிகழ்ச்சியின் போது டொனால்டு டிரம்ப் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

18. ஜூலை 31ம் தேதி ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர், காசா போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.

19. ஆகஸ்ட் 5ம் தேதி வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. இதனையடுத்து வங்கதேசத்தை தனது கண்ட்ரோலில் எடுத்தார் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான்.

20. ஆகஸ்ட் 14ம் தேதி குரங்கம்மை தொற்றுநோய் பரவல் அதிகரித்ததால், அதனை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு. கடந்த 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த அறிவிப்பை WHO அமைப்பு வெளியிட்டது.

21. ஆகஸ்ட் 14ம் தேதி தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதத்தா தவிசினை பதவியில் இருந்து நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கு சட்டவிரோதமாக அமைச்சர் பதவி கொடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

22. ஆகஸ்ட் 25ம் தேதி, டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெலிகிராம் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் உதவி, போதை பொருள் விநியோகம் போன்ற சம்பவங்களை துரோவ் கட்டுப்படுத்த தவறியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

23. ஆகஸ்ட் 31ம் தேதியன்று ரஷ்யாவில் கம்சட்கா பகுதியில் Mi-8 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 19 பயணிகள் மற்றும் 3 விமான குழுவினர் என மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.

24. ஆகஸ்ட் 31ம் தேதி பிரேசிலில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு குறித்த வழக்கில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கென சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்க தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

25. செப்டம்பர் 5ம் தேதி கென்யாவில் உள்ள பள்ளி விடுதியில் தீபிடித்து 17 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 சிறுவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

26. செப்டம்பர் 7ம் தேதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கலில் இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இல்லாமல் பூமிக்கு வந்தடைந்தது. இவர்கள் இருவரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்டது.

27. செப்டம்பர் 13ம் தேதி பவேரியன் நோர்டிக் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த குரங்கம்மை நோய்தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பூசியை அங்கீகரித்ததது உலக சுகாதார அமைப்பு. இந்த MVA-BN தடுப்பூசியை 18 வயதுக்கு மேலானோருக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

28. செப்டம்பர் 18ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், பேஜர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த நிலையில், 3000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

29. செப்டம்பர் 22ம் தேதி இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவரான அனுரகுமார திசநாயக்க 42.31 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் இலங்கையில் முதன்முறையாக இடதுசாரி ஆட்சி அமைந்தது.

30. செப்டம்பர் 25ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய அதிபர் அநுர குமார நிசநாயக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

31. அக்டோபர் 1ம் தேதி ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்ததால்  போர் பதற்றம் அதிகரித்தது. ஹிஸ்புல்லாவை அழித்து, அவர்களுடைய உள்கட்டமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காகவே இந்த ஊடுருவல் என இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி (herzi halevi) பகிரங்கமாக தெரிவித்தார்.

32. அக்டோபர் 7ம் தேதி மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மைக்ரோ RNA குறித்த ஆய்வை  மேற்கொண்டனர்.

33. அக்டோபர் 12ம் தேதி சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அதிசய வால் நட்சத்திரம் வானில் தோன்றியது. இந்த வால் நட்சத்திரம் C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என அழைக்கப்படுகிறது. 


34. அக்டோபர் 23ம் தேதி குப்பைகளை வைத்து வடகொரியா அனுப்பிய பலூன் தென் கொரியாவின் சியோல் பகுதியில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் வந்து விழுந்தது. வடகொரியாவின் இந்த செயல் பாதுகாப்பு அத்துமீறலாக கருதப்பட்டது.

35. அக்டோபர் 29ம் தேதி 1 ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை 8 மணி நேரத்திலேயே கொட்டித்தீர்த்ததால், சுனாமி போன்ற வெள்ளம் ஸ்பெயினை அடித்து காலி செய்தது. இந்த வெள்ளத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

36. நவம்பர் 5ம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம், அமெரிக்கவில் இரண்டு முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்ட க்ரோவர் கிளெவ்லாண்டின் சாதனையை  டிரம்ப் முறியடித்தார்.

37. நவம்பர் 9ம் தேதி பாகிஸ்தான் குவெட்டா ரயில் நிலையத்தில் ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 16 ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

38. நவம்பர் 14ம் தேதி அன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 159 இடங்களை கைபற்றி வெற்றிப் பெற்றது.  

39. நவம்பர் 14ம் தேதி நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இன மக்களுக்கு எதிரான  சட்டதிருத்த நகலை கிழித்தெறிந்து எதிர்ப்பு தெரிவித்தார் எதிர்கட்சியை சேர்ந்த இளம் பெண் எம்.பி ஹானா ரவ்ஹீடி. இந்த சம்பவத்தின் போது அவர் ”ஹக்கா” என்ற பழங்குடி நடனமாடி எதிர்ப்பு தெரிவித்த வீடியோ பெரும் பாராட்டை பெற்றது.


40. நவம்பர் 21 தேதி பால்வெளிக்கு வெளியே உள்ள WOH G64 என்ற நட்சத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா. சூரியனை விட 2,000 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த நட்சத்திரம் விரைவில் வெடித்து சூப்பர் நோவா நிகழ்வுக்கு தயாராகும் என தெரிவிக்கப்பட்டது.

41. நவம்பர் 21ம் தேதி காசாவில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , பாதுகாப்புத்துறை அமைச்சட் யோவ் கலண்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பித்திருந்தது. நெதன்யாகுவுக்கு எதிராக கடந்த மே மாதமே கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

42. நவம்பர் 26ம் தேதி லெபனானின் இஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டது. இதன்மூலம் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிரான 14 மாத போர் முடிவுக்கு வந்தது. 

43. நவம்பர் 27ம் தேதி நமீபியாவில் நடைபெற்ற தேர்தலில் 57% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் நெடும்போ நந்தி-ண்டைத்வா வெற்றி பெற்றார். இதன்மூலம் 72வயதான நெடும்போ, நமீபியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


44. டிசம்பர் 3ம் தேதி தென்கொரிய   அதிபர்     யூன், வடகொரியாவுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள்  நாட்டின் நிர்வாகத்தை குறிக்கீடு செய்வதாக கூறி அவசர மார்ஷியல் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் உடனடியாக நாடாளுமன்றம் கூடியது. இதில் 190 உறுப்பினர்கள் அதிபர் யூனின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததால், இந்த மார்ஷியல் சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

45. டிசம்பர் 5ம் தேதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மைக்கேல் பாரியருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரதமராக பார்னியர் பதவியேற்று 3 மாதங்களிலேயே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

46. டிசம்பர் 8ம் தேதி ஒட்டுமொத்த சிரியாவையே கிளர்ச்சி குழு தன்வசப்படுத்தியது . இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த அசத் குடும்பத்தின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது. 


47. டிசம்பர் 10ம் தேதி, பால்வெளி மண்டலத்தில், சூர்ய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு இளம்  நட்சத்திரத்தை சுற்றி நீர் இருப்பதற்கான ஆதரத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீரானது உறை நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

48. டிசம்பர் 11ம் தேதியன்று சிரியாவில் அரசு கவிழ்க்கப்பட்டதால், அந்நாட்டின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டார். 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த இடைகால அரசு சிரியாவில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

49. டிசம்பர் 11ம் தேதி ஐரோபாவிலேயே சக்திவாய்ந்த பெண்ணாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தேர்வாகியுள்ளார். தனியார் நிறுவனம் நடத்திய இந்த முன்னெடுப்பில் மொத்தம் 28 பேர் போட்டியில் இருந்தனர்.

50. டிசம்பர் 14ம் தேதி அவசர நிலையை அறிவித்த தென் கொரிய அதிபா் யூன் சுக் இயோல்-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வரை அந்நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்டது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow