மறுபடியும் முதல்ல இருந்தா..! பிரபல தொலைக்காட்சியை வாங்க எலான் மஸ்க் திட்டம்?

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nov 27, 2024 - 01:14
Nov 27, 2024 - 01:18
 0
மறுபடியும் முதல்ல இருந்தா..! பிரபல தொலைக்காட்சியை வாங்க எலான் மஸ்க் திட்டம்?
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்

டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் அண்மைக் காலமாக பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் எலான் மஸ்க் பல்வேறு சாதனை முயற்சிகளை செய்து வருகிறார். சமீபத்தில், ஸ்பேஸ் எக்ஸின் கனவு திட்டமான எர்த்-எர்த் விண்வெளி பயணத்திட்டம் விரைவில் நனவாகும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். மேலும், டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டாா்ஷிப்' (Starship) ராக்கெட் சோதனையை எலான் மஸ்க் மேற்கொண்டார். இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் டிரம்ப் தனது அமைச்சரவையில் எலான் மஸ்கை இடம்பெற செய்ய வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எலான் மஸ்க் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான MSNBC-யை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, MSNBC-யின் தரவரிசை குறைந்து வருவதால் அந்நிறுவனமானது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது டொனால்ட் டிரம்பை விமர்சித்து இருந்தது.

மேலும், டிரம்பை விமர்சித்து அந்நிறுவனம் செய்தி வெளியிட்டதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் தொடர்பான கேபிள் நெட்வொர்க்கை விற்க அதன் தலைவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, டொனால்ட் டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் எலான் மஸ்கை டேக் செய்து, MSNBC நிறுவனம் விலைக்கு வந்துள்ளதாக விளையாட்டாக கூறினார். இதற்கு, 'அந்நிறுவனம் என்ன விலை' என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2017ஆம் ஆண்டு எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனம் என்ன விலை என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என்று பெயரிட்டார். தற்போது அதேபோன்று MSNBC நிறுவனத்தையும் வாங்கிவிடுவாறோ? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow