ஸ்பேஸ் எக்ஸ்-ன் உதவியை நாடிய நாசா..... விரைவில் பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
விமான தயாரிப்பில் போயிங் நிறுவனத்திற்கு முன் அனுபவம் உள்ளதால் நாசா இந்நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
அதன்படி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் ஏற்றிச் செல்வதற்காக ‘ஸ்டார் லைனர்’ எனும் ஸ்பேஸ் ஷிப்பை போயிங் நிறுவனம் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் கடந்த 2 மாதங்களாக விண்வெளி மையத்திலேயே சிக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் செப்டம்பர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்நிலையில் இருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதன்படி இந்த க்ரு டிராகன் விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?