தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!

போலியோ நோய் தாக்குதல் காரணமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

Aug 31, 2024 - 07:07
 0
தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!
தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன. 

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இஸ்ரேல் தாக்குதலை(Israel Attack) நிறுத்த மறுத்து வருகிறது. 

இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான்(Iran) ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே ஒரு வாரத்துக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த இஸ்மாயில் ஹனியே, வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பின் ராணுவத் தளபதி முகமது தைஃப் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் ஈரானுக்கு பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியது. ''இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததற்கு இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்காக இஸ்ரேலை கண்டிப்பாக பழிவாங்குவோம்'' என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரண முகாமில் தங்கி உள்ள ஒரு குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியது கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து போலியோ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படி முதல் கட்டமாக மத்திய காசாவில் முகாம்களில் தங்கி இருக்கும் 10 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: விஜய்யை விமர்சிக்கவில்லை; விஜய்யின் பொய்யை தான் விமர்சித்தேன் - ஹெச்.ராஜா ஓபன் டாக்

இதற்காக மனிதாபிமான அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிகமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. நாளை முதல் 3 நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் நாளை ஒதுக்கவும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow