உலகம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச அளவில் முடங்கியது விமானப் போக்குவரத்து!
International air traffic has been paralyzed
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை (Airspace) உடனடியாக மூடிவிட்டன. இதன் விளைவாக, அந்தப் பிராந்தியத்தின் வழியாகச் செல்லும் மற்றும் அங்கு தரையிறங்க வேண்டிய சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்திய நிறுவனங்களின் அதிரடி அறிவிப்பு

பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான தங்களது அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. வான்வெளி மூடப்பட்ட காரணத்தால், டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், பயணத்தின் நடுவிலேயே மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி விடப்பட்டது. மேலும், மேற்கு நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானச் சேவைகளிலும் பெரும் தாமதங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என டெல்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் நிலைப்பாடு

இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள முக்கிய விமான நிறுவனங்களும் தங்களது சேவைகளை முடக்கியுள்ளன. ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனம் வரும் மார்ச் 7-ஆம் தேதி வரை டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், ஏர் அரேபியா நிறுவனம் வளைகுடா நாடுகளுக்கான இன்றைய அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளது. ரஷ்யப் போக்குவரத்து அமைச்சகமும் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கான தனது விமானப் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தி வைத்துள்ளது.

முடங்கிய வளைகுடா விமான நிலையங்கள்

போர் பதற்றம் காரணமாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தோஹாவிற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் தனது அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாகவும் தற்காலிகமாகவும் ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல், ஈராக்கின் இர்பில் (Erbil) விமான நிலையமும் அனைத்து விதமான விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழலால், ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். போர் பதற்றம் தணிந்த பிறகே விமானச் சேவைகள் மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.