உலகம்

அமெரிக்கப் படைகள் பின்வாங்காது: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஒப்பந்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் பின்வாங்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் பின்வாங்காது: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
US President Trump
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் பின்வாங்காது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்தால் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவமான ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நாளை இஸ்லாமாபாத்தில் தொடங்கவுள்ள சூழலில், டிரம்பின் இந்தப் புதிய பதிவு மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

"ஒப்பந்தம் மீறப்பட்டால் கடும் தாக்குதல்"

தனது சமூக ஊடகப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை, கூடுதல் வெடிமருந்துகள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் கூடிய அமெரிக்காவின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் மீறப்பட்டால், இதுவரை உலகம் கண்டிராத வகையில் மிக வலிமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதத் தடை மற்றும் ராணுவத் தயார்நிலை

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது மற்றும் ஹோர்முஸ் நீரிணை எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. தற்போது அமெரிக்க ராணுவம் தனது ஆயுதங்களை நிரப்பிக் கொண்டும், ஓய்வெடுத்துக் கொண்டும் வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தற்காலிக அமைதி நீடிக்குமா அல்லது மீண்டும் போர் மூளுமா என்பது இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தெரியவரும்.