உலகம்

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குவைத் மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய தொழிலாளி பலி!
Kuwait Attack
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை குவைத் நாட்டின் மின்சார அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத் நாட்டின் மின் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய சேவை கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்குப் பணியிலிருந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், அந்த மின் நிலையக் கட்டிடம் பெரும் சேதமடைந்துள்ளதாகக் குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம், தனது நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பெட்ரோகெமிக்கல் அமைப்பு மீது எதிர்தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக ஈரானும் குற்றம் சாட்டியுள்ளது.

போரின் பின்னணி மற்றும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலே இந்த மோதலின் தொடக்கமாக அமைந்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை' (Strait of Hormuz) முடக்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தீவிரமடையும் எச்சரிக்கை

தற்போது இந்தத் தாக்குதலை அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளின் குடியிருப்புப் பகுதிகள் வரை விரிவுபடுத்தப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் இந்த முடிவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.