BJP Leader H.Raja About TVK Vijay : தமிழக பாஜகவின் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும் என்றும், ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2026 தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெறுவதற்கான ஒரு காலகட்டம். அதற்கான பணியும், கட்சியின் தலைமையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும் பணிகள் இருக்கும்” என்றார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “நொண்டிக் குதிரைக்கு சறுக்குகின்றது சாக்கு என்று சொல்வார்கள். அந்த மாதிரியாக அவர்கள் இஷ்டத்திற்கு பல்வேறு திட்டங்களிலே நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறார்கள். சென்ற 10 ஆண்டில் மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்து, ஏற்கனவே பல முறை பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்கள் பட்டியல் போட்டு சொல்லியிருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றதுபோல செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
மத்திய அரசுதான் தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறை, நீதிமன்றம், கம்யூனிகேஷன் நெட்வொர்க் என இவை அனைத்துக்கும் செலவு செய்கிறது. ஆகவே மத்திய அரசாங்கம் எல்லா மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக அதிகப்படியான செலவுகளை செய்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமல்ல நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தி மத்திய அரசாங்கம் எந்தவித செலவையும், எந்த ஒரு மாநிலத்திற்கும் செய்ய முடியாது. அவர்கள் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை வைத்துதான் செலவு செய்ய முடியும். விதிமுறைப்படி அவற்றை செய்து கொண்டிருக்கிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ”பிரதமர் மோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். இதில் தமிழக பாஜக என்பது தனி அல்ல. அகில இந்திய பாஜகவின் ஒரு அங்கம் தான். மூன்று லட்சம் கோடி ரூபாய் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும்.
நான் விஜய்யை விமர்சித்தேன் என்று சொல்வது பொய். நான் விஜய்யை விமர்சிக்கவில்லை. அவரின் மெர்சல் படத்தில், சொன்ன பொய்க்கு எதிராக தான் அறிக்கை கொடுத்தேன். விஜய்க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட, பொய் கதைக்காக, சொன்ன விஷயத்தை நாங்கள் பஞ்சர் செய்தோம், அவ்வளவுதான். விஜய் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று சொன்னவுடனேயே நான் வரவேற்பு தெரிவித்தேன்” என்றார்.