வார விடுமுறை... தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள்... சென்னை மக்களுக்கும் குட் நியூஸ்!
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை: வார இறுதி நாட்கள், முகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வார இறுதி நாட்களான ஆக.31 (இன்று) செப். 1 (நாளை) ஆகிய தினங்களில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னை தவிர்த்து மற்ற ஊர்களில் இருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு 360 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த வழித்தடங்களில் நேற்று (ஆக.30) 355 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, நாகை, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதாவரத்தில் இருந்தும் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!
ஞாயிற்றுக்கிழமையான நாளை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவர்களுக்காகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பொதுமக்களின் வசதிக்காக தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் www.tnstc.in அல்லது செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழாயை முன்னிட்டு, 8ம் தேதி வரை தினமும் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா, இரு தினங்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 10 நாட்கள் சிறப்புப் பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி ஆகியவை நடைபெறவுள்ளது. இதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் பெசன்ட் நகர் செல்வார்கள் என்பதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
What's Your Reaction?