மீண்டும் வெடித்து சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்.. இதுதான் நடந்தது
விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவின் செயல்திறன் துறையின் (DOGE) தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அரசின் செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் எலான் மஸ்க் வெளிநாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தம், அரசின் பல துறைகளில் பணியாற்றியவர்களை பணி நீக்கம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் மூலம் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் 8’ (Starship 8) மார்ச் 6-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அப்போது 9 மணி 30 நிமிடங்களில் ராக்கெட்டியின் தொடர்பை கட்டுப்பாட்டு அறையினர் இழந்தனர்.
மேலும் படிக்க: தோண்டு.. தோண்டு.. ’சாவா’ பட எஃபெக்டால் தங்கத்தை தேடி நடுராத்திரி குவிந்த ஊர் மக்கள்
இதையடுத்து அமெரிக்க விமான போக்குவரத்து துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட வான் வழித் தடத்தில் இயக்கப்படும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராக்கெட்டானது கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில் தானாகவே வெடித்து சிதறுமாறு வடிவமைக்கப்பட்டிருந்ததால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராக்கெட்டை வெடிக்க வைத்தனர். ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தது. இந்நிலையில், ராக்கெட்டின் பாகங்கள் எரிந்து கொண்டே பூமியை நோக்கி வந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஸ்பேக் எக்ஸ் நிறுவனம், “ராக்கெட் எரிந்த பகுதிகளில் எந்த நச்சு பொருளும் இல்லை. இதனால் கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்துக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது. இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத் தன்மையை மேம்படுத்த உதவும்” என்று குறிப்பிட்டிருந்தது. முன்னதாக கடந்த ஜனவரி 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட 'ஸ்டார்ஷிப் 7' ராக்கெட் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






