அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா.. அதிபர் தேர்தலில் இருந்து பின்வாங்க முடிவு?
US President Joe Biden : 'கொரோனா காரணமாக ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

US President Joe Biden : அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இதற்காக இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக லாஸ் வேகாஸ் சென்று இருந்தார். அங்கு ஜோ பைடனின் உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்ட்டதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர், ''அதிபர் ஜோ பைடனுக்கு சிறிய அளவிலான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக லாஸ் வேகாஸ் பிரசார கூட்டத்தில் ஜோ பைடன் பங்கேற்க மாட்டார்'' என்று கூறியுள்ளார்.
81 வயதான ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனுக்கு ஏற்கெனவே ஜனநாயக கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
அமெரிக்க தேர்தல் நடைமுறையின்படி கடந்த மே மாதம் 27ம் தேதி ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டா நகரில் அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதல் விவாதம் நடந்தது. சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பணவீக்கம் மற்றும் நிதி விவகாரம், கருக்கலைப்பு சட்டம், புலம்பெயர்ந்தவர்கள் விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள்.
இந்த விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் தடலாடியாக பேசினார். ஆனால் அவருக்கு பைடன் உரிய பதிலடி கொடுக்கவில்லை. இது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் வயதானதால் ஜோ பைடன் மறதி பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
மறதி காரணமாக சொந்த கட்சியினரின் பெயர்கள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டவர்களின் பெயரை மறந்து அவர் மாற்றி, மாற்றி கூறியது சர்ச்சையை கிளப்பியது. ''பைடனுக்கு வயதாகி விட்டதால் அவரால் முன்புபோல் வேகமாக செயல்பட முடியவில்லை; இப்படியே இருந்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். ஆகவே அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியான மிட்ச்செல் ஒபாமாவை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்'' என்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஜோ பைடனுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி அவரை அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்குமாறு கோரிக்கை வலுக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோ பைடன் அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
What's Your Reaction?






