Joe Biden in US Presidential Election 2024 : அமெரிக்க அதிபருக்கான பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இதனையடுத்து, தற்போதைய ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் பிரச்சாரங்களும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்நிலையில் 82 வயது ஜோ பைடன் பல்வேறு பிரசாரங்களில் தடுமாற்றத்தை சந்தித்தார். டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையே நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தின் போது பைடனின் விவாதம் அவரது கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. இதனால் அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சி நிர்வாகிகளே கோரிக்கைகளை வைத்தனர்.
பைடனின் செயல்பாடுகள் கட்சியின் வெற்றியை பாதிக்கிறது; போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஜனாதிபதி வேட்பாளர்கள் தாமாக முடிவெடுத்தால் மட்டுமே போட்டியில் இருந்து விலக முடியும் என்பதால் அவரது கட்சியினர் தொடர் அழுத்தங்களை கொடுத்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறினர்
இதுகுறித்து பேசிய அவர்கள், “வயது மூப்பு காரணமாக ஜோ பைடனால் முன்பு போல் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. அவரால் ஒரு வாக்கியத்தை கூட முழுமையாகப் பேசி முடிக்க இயலவில்லை. இப்படி இருக்கும் சூழலில் டொனால்ட் ட்ரம்ப்பை ஜோ பைடன் தோற்கடிப்பது கடினமாகிவிடும். எனவே அவருக்கு பதிலாக 59 வயதான கமலா ஹாரிஸை நிறுத்துவது புத்திசாலித்தனமானது” எனத் தெரிவித்திருந்தனர்.
இதையேற்றுக்கொண்ட ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து அதிரடியாக அறிவித்தார். அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப்பை நேருக்கு நேராக மோத தயாராகி வருகிறார்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலகியது ஏன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறுத்து கூறியுள்ள ஜோ பைடன், “இளைய தலைமுறைக்கு வாய்ப்பை கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழி.
இப்போது ஜனநாயகத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கவே அதிபர் ரேஸில் இருந்து விலகி இருக்கிறேன். நான் இந்த பதவியை மதிக்கிறேன், ஆனால் நான் என் நாட்டை அதைவிட அதிகம் நேசிக்கிறேன். உங்கள் அதிபராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய கவுரவம். ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது எனது பதவியை விட முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.