நீலகிரியை துரத்தும் கனமழை.. வெள்ளக்காடான கூடலூர்.. எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
நீலகிரி: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அங்குள்ள ஓவேலி,பொன்னம்புழா, இறுவயல் மற்றும் மாயார் உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலுர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் மட்டுமின்றி ஊட்டி, பந்தலூர், குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் நீலகிரி மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதனால் மாநில பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டத்துக்கு சென்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர். மேலும் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் ஊட்டி, மஞ்சூர், தேவாலா, கூடலூர் ஆகிய 4 இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், குந்தா, ஊட்டி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் நீர்நிலைகளின் அருகே செல்வபவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மாவட்ட மக்கள் நீலகிரிக்கு சுற்றுலா வர வேண்டாம் எனவும் மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20.4 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. எமரால்ட் பகுதியில் 12.4 செ.மீ, அப்பர் பவானியில் 10.6 செ.மீ,பந்தலூரில் 8.4 செ.மீ, சேரங்கோடு 8.3 செ.மீ, கூடலூரில் 7.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
What's Your Reaction?