ஏப்ரல், மே வந்துவிட்டால் போதும், கோடை வெயிலை சமாளிப்பதே பெரிய சவாலாகிவிடுகிறது. ஒருபக்கம் ஏசி ரூமில் தஞ்சமடைவது சுகம் என்றால், இன்னொரு பக்கம் வெயிலுக்கு இதமாக எதேனும் ஜூஸ் குடிப்பது பெரும் சுகம். இதில் சாமானியன் முதல் அனைவரும் விரும்பும் ஒன்று தர்பூசணி. விலை குறைவு என்பதால், தர்பூசணியை பழமாகவும் ஜூஸாகவும் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சம்மர் சீசனுக்காக மெட்ரோ சிட்டி முதல் குக்கிராமங்கள் வரை, திடீர் திடீரென தர்பூசணி கடைகள் முளைக்கின்றன. இதன்மூலம் தர்பூசணி விவசாயிகளின் வாழ்வாதாரமும் வளம் பெறுகிறது.
அதேபோல், இந்தாண்டும் கோடை காலத்தில் தர்பூசணி வியாபாரம் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருக்க, திடீரென கிளம்பிய சர்ச்சை அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது, தர்பூசணி பழங்கள் செயற்கையாக ஊசி செலுத்திப் பழுக்க வைக்கப்படுகிறதா என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட, அது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஊசி மூலம் பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்யத் தொடங்கியதால், தமிழ்நாடு முழுவதும் அதன் விற்பனை சரிந்தது.
இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ் குமார் கொடுத்த விளக்கத்தில், “பழங்களை வெட்டும்போதோ, அதனைக் கையில் தொட்டவுடனோ அடர் சிகப்பு நிறம், மிகவும் தித்திப்புடன், சர்க்கரை பாகு போன்று இருந்தால் அது இயற்கையான பழங்கள் கிடையாது. எல்லா விவசாயிகளும் தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக கூறவில்லை. அப்படி ரசாயனம் கலக்கப்படுவதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம்.” எனக் கூறியிருந்தார். ஆனாலும், பொதுமக்கள் தர்பூசணியை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், “விவசாயிகள் சேவை நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அப்படி இருக்க ஊசி செலுத்தியெல்லாம் தர்பூசணியை பழுக்க வைக்க முடியாது, இது சுத்தமான வதந்தி. இதனால் தர்பூசணி விற்பனை சரிந்துள்ளதாக” கூறுகின்றனர்.
அதேபோல், “ஊசி போட்டு பழுக்க வைக்கும் பழங்கள், இரண்டே நாளில் அழுகிவிடும் என்றும், அதனால் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும்” வியாபரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், எந்த பழங்களாக இருந்தாலும் அதனை, கெமிக்கல் மூலம் பழுக்க வைக்க முடியாது என்றும், நேரடியாக தோட்டங்களில் இருந்து வாங்கும் தர்பூசணிகளால், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஆகமொத்தம் தர்பூசணியை ஊசி போட்டெல்லாம் பழுக்க வைக்க முடியாது என்பதை, விவசாயிகளும் வியாபாரிகளும் தங்களது அனுபவத்தின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளனர். இது தர்பூசணி பிரியர்களை நிம்மதியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
தர்பூசணி சாப்பிடலாமா? வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை.. வேதனையில் விவசாயிகள்!
பேய் இருக்கா இல்லையா என்ற சந்திரமுகி பட காமெடி போல, கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிய நிலையில், தர்பூசணி சாப்பிடலாமா கூடாதா..? என்ற சர்ச்சை, விவசாயிகளை கலக்கமடைய செய்துள்ளது. நிறத்திற்காகவும், சுவைக்காகவும் தர்பூசணியில் ஊசியின் மூலம் இரசாயணம் செலுத்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தர்பூசணியின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதைனையில் ஆழ்ந்துள்ளனர்.