தமிழ்நாடு

கார் பார்கிங் விவகாரம்.. தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

கார் பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதியின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கார் பார்கிங் விவகாரம்.. தர்ஷன் மற்றும் லோகேஷ் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
நடிகர் தர்ஷன்

நடிகர் தர்ஷன் தியாகராஜன், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் வசித்து வருகிறார். தர்ஷன் காலையில் ஜிம்மிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர் யாரோ காரை நிறுத்தியதாகவும், அந்த கார் யாருடையது என்று நீண்ட நேரமாக தர்ஷன் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, அங்குள்ள டீ கடையில், இருந்த ஒருவர் அது எங்களுடையது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த காரை பார்க்கிங் செய்தவர், உயர் நீதிமன்ற நீதிபதி மகன் ஆதிச்சூடி என்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

நீதிபதியின் மகன் மற்றும் மனைவி லாவண்யா, மாமியார் மகேஷ்வரி ஆகியோருக்கும் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான இருவரும் அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . மேலும், அவர்கள் ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் மீது புகார் அளித்துள்ளனர்.

அதேபோல் நடிகர் தர்ஷன் தரப்பிலும், ஜெ,ஜெ, நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெ,ஜெ நகர் போலீஸார், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, நீதிபதி மகன் அதிச்சூடி, மனைவி லாவண்யா, மாமியார் மகேஷ்வரி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் தர்ஷனின் நண்பர் லோகேஷை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிந்து இன்று மாலை நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் லோகேஷ் ஆகியோரை அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்து பிறகு அம்பத்தூர் குற்றவியல் நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தர்ஷன், லோகேஷ் ஆகிய 2 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.