தமிழக வனப் பகுதிகளில் பரவிக்கிடக்கும் அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் 191 இடங்களில் அந்நிய மரங்கள் பரவி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, அந்நிய மரங்களை அகற்றுவதற்கு வனத்துறை சார்பில் சிப்பர் மற்றும் பல்வரீஷ் என்ற நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார் .
அந்த இயந்திரங்களை பயன்படுத்தி அன்னிய மரங்களான உன்னி செடி வகை மரங்களை அப்புறப்படுத்தி, அதை துகள்களாக மாற்றி அகற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் சமர்ப்பித்தார்.
வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இதே போல் கிராமப் பகுதிக்குள் யானை உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து மனித விலங்குகள் மோதலை தடுக்க ஏபிசி என்று சொல்லக்கூடிய ஏரியல் பஞ்ச் கேபிள் என்ற நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடலூர் பகுதி தொரப்பள்ளி முதல் தெப்புக்காடு வரை இந்த நவீன மின் பகிர்மான முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் விலங்குகள் கிராம பகுதிக்குள் வரும்போது சம்பந்தப்பட்ட மின் வயரில் உரசும்போது, அந்த பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டு விடும் என்றும் இதனால் விலங்குகளின் உயிரிழப்பு தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு
வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
தமிழக வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.