தமிழ்நாடு

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்
குழந்தையை கடத்த முயன்ற இளைஞர் தப்பிச் செல்லும் வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் மேற்கு கால்வாய் சாலை பகுதியை சேர்ந்த பெண், ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் ஃபார்மா கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் தனியார் இவென்ட் & மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அத்துமீறிய இளைஞர்

இந்நிலையில் நேற்று இரவு அந்த வீட்டு கதவை பூட்டாமல் தனது மூன்று வயது ஆண் குழந்தை மற்றும் மாமியாருடன் தூங்கி கொண்டிருந்தார். அவரது கணவர் விஜயகுமார் பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்க சென்றுள்ளார். இன்று அதிகாலையில் ஹெல்மெட் அணிந்தவாறு தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ( சூமோட்டோ டி சர்ட்) ஒருவர் சகாயமேரி வீட்டில் புகுந்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடியதுடன் அங்கு தூங்கி கொண்டிருந்த மூன்று வயது ஆண் குழந்தை கழுத்தில் ஏதேனும் நகைகள் உள்ளதா என தொட்டு பார்த்துள்ளார்.

அப்போது திடீரென குழந்தை எழுந்து அழுததால் சகாயமேரி அலறி அடித்து கொண்டு எழுந்து போது ஹெல்மெட் அணிந்திருந்த திருடன் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். உடனே சகாயமேரி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து பைக்கில் தப்பிச் சென்ற நபரை விரட்டி சென்று தரமணி பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

செல்போன் திருட்டு

செல்போனை திருடிக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற போது பொதுமக்கள் அவரை மற்றொரு வாகனத்தில் விரட்டி சென்று பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பதும், இவர் மீது செல்போன் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

டெலிவரி ஊழியர் கைது

இதனை அடுத்து பிடிபட்ட கிருஷ்ணமூர்த்தி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தை கடத்தல்,குடியிருப்பில் திருட்டு, வீட்டில் அத்துமீறி நுழைதல், அத்துமீறி புகைப்படம் பிடித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாலியல் தொந்தரவு செய்ததாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு புகுந்து திருட முயற்சித்ததோடு, குழந்தையை கடத்தி திருட முயற்சித்து குழந்தையின் தாய்க்கு பாலியல் தொந்தரவும் செய்த திருடனை பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.