தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ரம்மியால், ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது -  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் அரவிந்த் ஶ்ரீவஸ்தா ஆகியோர் வாதிட்டனர்.

அப்போது, காசு கொடுத்து ரம்மி விளையாடினால் அதுவும் சூதாட்டம் தான் எனவும், ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும், இதனை ஒழுங்குபடுத்துவது அரசின் பொறுப்பு எனவும் கூறினர்.

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வயதை முறையாக சரிபார்க்க முடியாது என்பதால் தான், ஆதார் எண் கேட்கப்படுவதாகவும், மக்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசால் ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்த முடியாது என்ற நிறுவனங்களின் வாதத்தை ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆதார் எண் மட்டும் தான் கேட்கப்படுவதாகவும் கைரேகை அல்லது வேற எந்த தனிப்பட்ட தகவல்களையும் கேட்கவில்லை எனவும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்பதற்காகவே ஆதார் எண் கேட்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.

ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுவது தனி நபர் மட்டுமல்ல எனவும், ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாகவும் ரம்மி விளையாடுவதை தொழிலாக கொண்டவர்கள், 24 மணி நேரம் விளையாடினாலும் கூட அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

கேண்டி க்ரஷ் உள்ளிட்ட விளையாட்டோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு எனவும், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே ஒழுங்குபடுத்தும் விதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் அரசு சார்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் வாதம் நிறைவடைந்ததை அடுத்து ஆன்லைன் நிறுவனங்களின் வாதத்திற்காக வழக்கு ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.