நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மார்ச் 27-ஆம் தேதி ‘எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘எம்புரான்’ திரைப்படத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றி மறைமுகக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவுக்கும் அணை எனவும் அந்த அணை உடைந்தால் கேரளம் அழியும் என்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இந்த படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், 'எம்புரான்' திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்படாத முல்லைப்பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது 'எம்புரான்' திரைப்படம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது பேசிய அவர், 'எம்புரான்' திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவிக்கும் அணை எனவும், அந்த அணை உடைந்தால் கேரளம் அழியும் என்ற காட்சி இடம்பெற்றிருப்பதாகவும் அத்திரைப்படம் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'எம்புரான்' திரைப்படத்தை பார்க்கவில்லை என்றாலும் அதனை பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும் போது கோவமும் பயமும் வருவதாக கூறினார். இப்படிப்பட்ட நிகழ்வை திரைப்படத்தில் பதிவு செய்திருந்தால் அவை தேவையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்சாரில் கட் செய்யப்படாத காட்சிகள் தற்போது கிளம்பிய எதிர்ப்புகளுக்கு பின் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் எதிரொலித்த 'எம்புரான்’ பட சர்ச்சை.. ஸ்டாலின் கருத்து
'எம்புரான்' திரைப்படத்தில் சென்சாரில் நீக்கப்படாத காட்சிகள் கடும் எதிர்ப்புக்கு பின் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.