தமிழ்நாடு

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்

தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்
தீப்பெட்டி தொழில் குறித்து விவாதம்

தமிழகத்தில் காஞ்சி பட்டு, மதுரை சுங்குடி சேலை, தஞ்சாவூர் ஓவியம், ஆரணிப்பட்டு, பத்தமடை பாய் உள்ளிட்ட 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சிவகாசி, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி உறுப்பினர் அசோகன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தாமோ அன்பரசன், “ பொதுவாக புவிசார் குறியீடு பெற வேண்டுமெனில் அப்பகுதியில் அந்த பொருள் தோன்றியதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். சிவகாசி, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வருவதால் அதற்கு புவிசார் குறியீடு வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தீப்பெட்டி சிவகாசியில் தோன்றியதற்கான வரலாற்றுச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அதனை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. வரலாற்றுச் சான்றிதழ் பெற்ற பின் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்கள் இருப்பதால் தான் அதற்கு நூற்றாண்டு விழா அண்மையில் நடத்தப்பட்டது. எனவே சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டியில் தீப்பெட்டிகள் தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார்.

இதற்கு, தீப்பெட்டி தொழில் ஜப்பானில் இருந்து கற்றுக் கொண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொழில் என்பதை உறுப்பினர் அசோகன் சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் அதனை சொல்லவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் தாமோ அன்பரசன், கடம்பூர் ராஜு சொல்வது போல உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் அதனை தங்களிடம் வழங்கினால் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.