தமிழ்நாடு

தவெக பேனரில் தொடரும் எழுத்துப்பிழை.. விஜய்க்கு புது தலைவலி

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுத்து பிழையுடன் வைக்கப்பட்டுள்ள பேனர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தவெக பேனரில் தொடரும் எழுத்துப்பிழை.. விஜய்க்கு புது தலைவலி
எழுத்து பிழையுடன் அச்சடிக்கப்பட்ட தவெக பேனர்கள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக கட்சி உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தினார். சமீபத்தில், சென்னையில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய், வரும் தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டியே என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக திமுக-அதிமுகவும் மோதி வந்த நிலையில் விஜய்யின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் பதிலடி கொடுத்தனர். தவெக தலைவர் விஜய், திமுகவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மக்களவை-மாநிலங்களவையில் பல விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னை புறநகர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தவெக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் ‘வக்ஃபு மசோதவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்’ என்று எழுத்து பிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தவெக பேனரில் எழுத்து பிழைகள் தொடர்ந்து வருகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 'கண்டித்து என்பதற்கு பதிலாக கன்டித்து’ என்று குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக தவெக பேனரில் எழுத்துப்பிழை வருவது மற்ற கட்சியினர் கேலி செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனை விஜய் காதிற்கு எட்டுமா? இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி தற்போது வலுத்து வருகிறது.