Joe Biden Praised PM Modi: பிரதமர் மோடியை திடீரென பாராட்டிய ஜோ பைடன்.. சொன்னது என்ன?
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
வாஷிங்டன்: பிரதமர் மோடி கடந்த வாரம் அரசு முறை பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சென்றிருந்தார். முதலில் போலந்து சென்றடைந்த மோடி, அந்த நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க்கை (Donald Tusk) சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி போலந்தில் இருந்து ரயிலில் சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் சென்றடைந்தார். அங்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் சென்றது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அதுவும் உக்ரைன் சென்ற மோடியை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆரத்தழுவி வரவேற்றது இந்தியா மட்டுமின்றி ரஷ்யாவுக்கு ஆதரவான நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்தது.
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம், இந்தியா-உக்ரைன் இடையிலான உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜெலன்ஸ்கியும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இரண்டாவது உக்ரைன் அமைதி மாநாட்டை ஏற்று நடத்த பிரதமர் மோடிக்கு, ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அங்கு துணிச்சலான பயணம் மேற்கொண்டார் என்றும் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அவர் ராஜதந்திர நடவடிக்கை மேற்கொண்டதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை உலக நாடுகளின் பத்திரிகைகளும் பாராட்டின. இந்நிலையில், உக்ரைனுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட ஜோ பைடன், ''பிரதமர் மோடி போலந்து மற்றும் உக்ரைன் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரிடம் தொலைபேசி மூலம் பேசினேன்.
உக்ரைனில் அமைதி ஏற்படவும், அங்கு மனிதாபிமான உதவிகள் செய்யப்படும் என்று கூறிய பிரதமர் மோடியை பாராட்டினேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வருவதற்காக இணைந்து செயல்பட நாங்கள் (பிரதமர் மோடி, ஜோ பைடன்) இருவரும் உறுதி பூண்டுள்ளோம்'' என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, ஜோ பைடன் இருவரும் உக்ரைன் விவகாரம் மட்டுமின்றி வங்கதேசத்தில் நடந்த வன்முறை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
ஆனாலும் 'போர் எதற்கும் தீர்வு அல்ல; போரை நிறுத்த வேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். அப்போதும் போர் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வராது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?