இங்க வாழவே முடியாது.. மிக மோசமான நகரங்களின் பட்டியல் இதோ!
அமெரிக்காவில் மக்கள் அதிகம் வாழ விரும்பாத இடங்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் பட்டியல் வெளியாகி உள்ளது.

விசா கிடைப்பதற்கான விதிமுறைகள் கடினமாக இருந்தாலும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பயணிக்க எண்ணும் ஒரு இடமாகவே இருந்து வருகிறது அமெரிக்கா. அப்படியான ஒரு ஊரில், மனிதர்கள் வாழ விரும்பாத இடங்கள் இருக்கிறது என்பதை காட்டுகிறது ஒரு சர்வே. அமெரிக்காவில் மக்கள் வாழ விரும்பாத நகரங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது அந்நாட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Clever. இந்த ஆய்விற்காக சுமார் 1000 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியதுடன், இடம்பெயர்வு தரவுகளையும் ஆய்வு செய்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில், மக்கள் அதிகம் வாழ விரும்பாத நகரங்களின் பட்டியலில் வாஷிங்டன் டிசி முதலிடம் பிடித்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 1000 பேரில் 33% மக்கள் வாஷிங்கடன்னை மோசமான நகரம் என பட்டியலிட்டுள்ளனர்.
வாஷிங்டனில் விலை உயர்வு பிரச்சனைகள் இருப்பதாலும், அங்கு நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாலும் அந்த நகரம் வாழத்தகுந்ததாக இல்லை என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் 274 கொலை சம்பவங்கள் வாஷிங்டன்னில் நடந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனை தாண்டி நியூயார்க் நகரம், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோவும் மக்கள் அதிகம் வாழ விரும்பாத நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மேலும், இந்த நகரங்களில் வீட்டு வசதிக்கான கட்டணங்கள் கட்டுபடியாகாததே இதற்கு காரணம் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லிஸ்டில் 7வது இடத்தை பிடித்துள்ள பால்டிமோர், அதிக கொலை, கொள்ளை நடக்கும் இடமாக இருக்கிறது. மேலும், நியூ மெக்சிகோ, டெக்சாஸ், லூசியானா, அலாஸ்கா ஆகிய மாநிலங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், நல்ல வானிலை, குறைந்த குற்ற சம்பவங்கள் என மக்கள் வாழ விரும்பும் இடங்களாக டாம்பா, சார்லட், அட்லாண்டா, டென்வர், லாஸ் வேகாஸ், மியாமி ஆகிய நகரங்கள் இருக்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 23 சதவீத மக்கள் டாம்பா நகரத்தை சிறந்த இடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதேபோல, முன்பு ’கோல்டன் ஸ்டேட்’ என கருதப்பட்ட கலிபோர்னியா போன்ற இடங்களும் தற்போது தனது மவுசை இழந்துள்ளது. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மோசமான மதிப்பெண்கள் பெற்றதால் சமீபத்தில் நுகர்வோர் விவகார வாக்கெடுப்பில் கடைசி இடத்தை கலிபோர்னியா பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “விஜய்கிட்ட அரசியல் பேசமாட்டேன்… என் வீட்டுல என்ன நடந்தா உங்களுக்கு என்ன?” டென்ஷனான வெங்கட் பிரபு
என்னதான் வளர்ந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவில் அனுதினமும் துப்பாக்கிச்சூடு சம்பங்களும், மேலும் பல குற்றச்சம்பவங்களும் நடப்பது வழக்கம். இதனால் ராணுவம், உள்கட்டமைப்பு, கல்வி என பல விஷயங்களில் அமெரிக்கா சிறந்து விளங்கினாலும், சட்டம்-ஒழுங்கில் பின்தங்கியே இருக்கிறது என்ற கருத்து உலக நாடுகள் மத்தியில் இருந்து தான் வருகிறது. இதற்கு காலம் காலமாக அரசியல் தலைவர்கள் மற்றும் அதிபர்கள் மீது நடந்த சமூகவிரோத தாக்குதல்களே சான்று. இவ்வாறு இருக்கும் சூழலில், தாங்கள் வாழும் இடங்களையே, வாழ விரும்பாத இடமாக அமெரிக்க வாசிகள் தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.
What's Your Reaction?






