GOAT: “விஜய்கிட்ட அரசியல் பேசமாட்டேன்… என் வீட்டுல என்ன நடந்தா உங்களுக்கு என்ன?” டென்ஷனான வெங்கட் பிரபு

கோட் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து விஜய் பிரஷர் கொடுக்கவில்லை என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

Aug 18, 2024 - 11:00
Aug 18, 2024 - 11:01
 0
GOAT: “விஜய்கிட்ட அரசியல் பேசமாட்டேன்… என் வீட்டுல என்ன நடந்தா உங்களுக்கு என்ன?” டென்ஷனான வெங்கட் பிரபு
விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் - வெங்கட் பிரபு

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் போதே, இது ஆக்ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தப் படம் செப்.5ம் தேதி வெளியாகவுள்ளதால், அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகவுள்ளன. முக்கியமாக கோட் உலகம் முழுவதும் 6000 ஸ்க்ரீன்களில் ரிலீஸாகவிருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் கொடுத்துள்ளார். 

இதனிடையே கோட் படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கிறதா என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியுள்ளார். கோட் ட்ரைலர் வெளியான பின்னர் படக்குழு தரப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ட்ரைலரில் இடம்பெற்ற “உங்கள லீட் பண்ணப் போறது ஒரு புது லீடர்” என்ற வசனம் குறித்து கேள்வி எழுந்தது. அதாவது “இது விஜய்யின் அரசியல் என்ட்ரியை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளதா எனவும், இப்படத்தில் அரசியல் வசனங்கள் வைக்க வேண்டும் என விஜய் பிரஷர் கொடுத்தாரா” என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, கோட் படத்தில் அரசியல் கருத்துகளோ அல்லது பஞ்ச் வசனங்களோ வைக்க வேண்டும் என விஜய் பிரஷர் கொடுக்கவில்லை எனக் கூறினார். மேலும், அரசியல் என்பது விஜய்யின் தனிப்பட்ட விருப்பம், அதில் நான் தலையிடவில்லை; ஆனால், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்றார். அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யிடம் அரசியல் பற்றி பேசியதே கிடையாது, அவரும் என்னிடம் அரசியல் முடிவுகள் குறித்து கருத்து கேட்டது இல்லை எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உங்களது குடும்பத்தில் இருந்து யாராவது விஜய்யின் கட்சியில் இணைகிறார்களா, அல்லது தேர்தலில் போட்டியிடுவார்களா என வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், உங்கள் குடும்பத்தில் விஜய்யின் அரசியல் கட்சிக்கு எந்தளவு ஆதரவு உள்ளது என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு கொஞ்சம் டென்ஷனான வெங்கட் பிரபு,”என் குடும்பத்துல யாரு எந்த கட்சிக்கு ஆதரவுன்னு நான் ஏன் சொல்லணும். உங்க குடும்பம் பற்றி நான் கேக்குறேனா, இந்த கேள்வியே தப்பு..” என கட் & ரைட்டாக பதில் கூறினார் வெங்கட் பிரபு.

மேலும் படிக்க - கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் தடையா..? 

இறுதியாக கோட் பக்கா கமர்சியல் படம், இதில் விஜய்யின் ஆக்ஷன் ட்ரீட் நிறையவே உள்ளன. இப்படியொரு கமர்சியல் படம் பண்ண வேண்டும் என விஜய் நீண்டநாளாக ஆசைப்பட்டு வந்தார். அது இப்போது கோட் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நடிக்க ஓக்கே சொன்ன மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow