GOAT Audio Launch: கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் தடையா..? ஷாக்கான வெங்கட் பிரபு

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

Aug 18, 2024 - 15:34
Aug 18, 2024 - 15:54
 0
GOAT Audio Launch: கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் தடையா..? ஷாக்கான வெங்கட் பிரபு
கோட் ஆடியோ லான்ச் அப்டேட்

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ட்ரீட்டாக அமைந்துள்ள கோட் ட்ரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கோட் ட்ரைலர் ரிலீஸானதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது அவர்கள் இருவரும் கோட் உருவானது முதல், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரை பல தகவல்களை கொடுத்தனர். கோட் ட்ரைலரை தொடர்ந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது தான் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. காரனம், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்தானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இந்நிகழ்ச்சியை பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக படக்குழு திடீரென கேன்சல் செய்தது. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகின. அதாவது விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு விஜய் தரப்பினர் மறுப்பு தெரிவித்ததோடு, லியோ வெளியான சில தினங்களிலேயே படத்தின் வெற்றி விழாவை அதே நேரு ஸ்டேடியத்தில் நடத்தினர். 

அதேபோல் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் ரீதியான தடை இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதிலும் முக்கியமாக விஜய் இப்போது தனது கட்சியின் பெயரை அறிவித்ததோடு, கொடி அறிமுகம், மாநாடு என அடுத்தடுத்த கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார். அதன் காரணமாக கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் தடை இருக்கலாம் என கேள்விகள் எழுந்தன. அதேபோல், கோட் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து யாராவது பேசி, அது வைரலாகிவிட்டால் படத்தின் ரிலீஸுக்கும் சிக்கல் வந்துவிடும்.

இதன் காரணமாக கோட் இசை வெளியீட்டு விழா நடைபெற வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது. இவைகளை சுட்டிக் காட்டி இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு அரசியல் ரீதியான தடையோ அழுத்தமோ எதுவும் கிடையாது. விஜய் சார் இன்னும் முடிவு சொல்லவில்லை, அவர் ஓகே சொல்லிவிட்டால் கண்டிப்பாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறும்” என்றார். அதேநேரம் படக்குழு தரப்பில் கோட் இசை வெளியீட்டு விழா குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். 

ஒருவேளை கோட் இசை வெளியீட்டு விழாவுக்கு வாய்ப்பில்லை என்றாலும், லியோ பட பாணியில் வெற்றி விழா கண்டிப்பாக நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow