சினிமா

பிப். 20 வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை வாரியத்திடம் சரணடைந்த தயாரிப்பு நிறுவனம்!

ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

பிப். 20 வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை வாரியத்திடம் சரணடைந்த தயாரிப்பு நிறுவனம்!
JanaNayagan
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) படக்குழு அனுப்பி வைத்துள்ளது.

நீதிமன்றப் போராட்டமும் தணிக்கை சிக்கலும்

ஜனநாயகன் படத்தைத் தணிக்கை செய்த வாரியம், படத்தின் வெளியீட்டிற்குச் சில நாட்களுக்கு முன்பாகச் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததுடன், படத்தை மறு ஆய்வுக் குழுவின் பார்வைக்குப் பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். (KVN) புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க ஆணையிட்டார்.

ஆனால், இதனை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த விவகாரத்தை மீண்டும் விரிவாக விசாரிக்க உத்தரவிட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் திடீர் முடிவு

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் ரிவைசிங் கமிட்டிக்கு (Revising Committee) அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் இன்னும் ஒரு வாரத்திற்குள் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான இறுதி முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

தணிக்கை சிக்கல்கள் முடிவுக்கு வரும் பட்சத்தில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. நீண்ட நாட்களாகப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள், இந்தச் செய்தியால் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக இன்னும் வெளியாகவில்லை.