இன்று மாலை வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா.... உறவினர்கள் தகவல்!
பிரபல திரைப்படப் பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படப் பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பழம்பெரும் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த அளவிற்கு தனது மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி.சுசீலா.
தற்போது 88 வயதாகும் பி.சுசீலா, 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் கலைமாமணி விருதுகள், பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் திருப்பதியில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிகாணிக்கை செலுத்திய பி.சுசீலா, நாராயண மந்திரம் என்ற பக்தி பாடலை மூச்சு இறைக்க பாடி சுவாமியை வழிபட்டார். இந்த காணொளி இணையதளத்தில் மிகவும் வைரலானது. பி. சுசீலா தனியாக 17,695 பாடல்களும் தெலுங்கில் மட்டும் 12,000 பாடல்களும் பாடகர் எஸ்.பி.பி.யுடன் 4,000 பாடல்களும், கே.வி. மகாதேவன் இசையமைப்பில் 2,000 பாடல்களும், கே. சக்ரவர்த்தி இசையமைப்பில் 2,500 பாடல்களும் பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிகமான பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார். தமிழில் பக்தி பாடல்கள் உள்ளிட்ட 6000 பாடல்களும் கன்னடத்தில் 5000 பாடல்களும் பாடியுள்ளார். எம்.எஸ்.வி இசையில் டி.எம்.செளந்தராஜன் உடன் 1,500 பாடல்கள் பாடியுள்ளார். மலையாளத்தில் 1,500 பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜய் ரசிகர்களை தூக்கி சாப்பிட்ட கூகுள் இந்தியா! ட்ரெண்டிங்கில் ‘கோட்’
கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வில் இருக்கும் பி.சுசீலா, வயது முதிர்வு மற்றும் சிறுநீரக தொற்று ஆகிய உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (ஆகஸ்ட் 17) அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் சற்று குணமடைந்துள்ளதாகவும் இன்று மாலை அவர் வீடு திரும்பவுள்ளதாகவும் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






