Rajini 75: ரஜினிகாந்த் 75 சூப்பர் ஸ்டார் அறிந்ததும் அறியாததும் ரஜினியின் மலரும் நினைவுகள்
தமிழ்த் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 75வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த 75 சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்.....
1. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்த ரஜினியின் இயற் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது பலரும் அறிந்ததே. ஆனாலும், ரஜினியின் பூர்விகம் மத்தியபிரேதசம் என்பது குறிப்பிடத்தக்கது.
2. சிறுவயதியிலேயே ரஜினியின் தாய் ஜூஜா பாய் இறந்துவிட, தந்தை ராமோஜி ராவ் கெய்வாட், அண்ணன் சத்ய நாராயணன் பரமாரிப்பில் வளர்ந்தார்.
3. ரஜினிக்கு சிறுவயதிலேயே கோபம் அதிகமாக வருமாம், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக தட்டிக் கேட்கும் துணிச்சல்காரராக வளர்ந்துள்ளார்.
4. படிப்பில் அதிக ஆர்வம் இல்லாத ரஜினி, இளமை பருவத்தில் பல வேலைகள் செய்துள்ளார். கூலி வேலை உட்பட பஸ் கண்டக்டராகவும் பணியாற்றியுள்ளார்.
5. மேடை நாடகங்களில் சிறப்பாக நடித்த ரஜினியின் திறமையை கண்டு வியந்த அவரது நண்பர் ராஜ் பகதூர், சினிமாவில் நடிக்கவும் உதவி செய்தார்.
6. திரைப்பட வாய்ப்புக்காக பெங்களூருவில் இருந்து சென்னை வரும் போது, ரஜினியின் வயது 26.
7. சென்னையில் நாடக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியை சந்தித்த கே பாலச்சந்தர், அவரை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம் செய்தார்.
8. ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த ரஜினிக்கு, அப்போதே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
9. எம் பாஸ்கர் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளியான பைரவி படத்தில் தான் ரஜினி முதன்முறையாக ஹீரோவாக நடித்தார்.
10. ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து 18 படங்களில் நடித்துள்ளனர், இவைகளில் ‘நினைத்தாலே இனிக்கும்’ தான் ரஜினி – கமல் சேர்ந்து நடித்த கடைசிப் படம்.
11. ரஜினியை சினிமாவில் அறிமுகம் செய்தது இயக்குநர் கே பாலச்சந்தர் என்றால், அவரை சூப்பர் ஸ்டாராக்கியது இயக்குநர் எஸ்பி முத்துராமன்.
12. கே பாலச்சந்தர் இயக்கத்தில் 7 படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
13. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள ரஜினி, ஹாலிவுட்டிலும் ’ப்ளட்ஸ்டோன்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
14. ரஜினி தனது தாய் மொழியான மராத்தியில், இதுவரை ஒரு படம் கூட நடித்ததில்லை என்பது பலரும் அறியாதது.
15. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் சூப்பர் ஹிட் இந்தி படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.
16. ரஜினி நடிப்பில் ஹிட்டான பில்லா, தீ, படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாட்ஷா போன்ற படங்கள், இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படங்கள்.
17. ரஜினியின் ஸ்டைல் தான் அவரை சூப்பர் ஸ்டாராக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது; ரஜினியைப் போல ஸ்டைலாக நடிப்பது கஷ்டம் என ஷாருக்கான் மனம் திறந்துள்ளார்.
18. ரஜினியுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா இருவரும் தான்.
19. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் அவருக்கு ஜோடியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.
20. ரஜினியின் சிறந்த நடிப்புக்காக இப்போதும் கொண்டாடப்படக் கூடிய ஒரே படம், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும். இதுவே ரஜினியின் ஃபேவரைட்டும் கூட.
21. ரஜினி முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம், மூன்று முகம். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜெகன்நாதன் இயக்கியிருந்தார்.
22. ரஜினி சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கிய முதல் திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன்.
23. ரஜினியின் 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரர்; எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளியான இப்படத்திற்காக 90 நாட்கள் அசைவம் சாப்பிடாமல், புகை பிடிக்காமல் நடித்தார்.
24. ரஜினியின் 150வது படமாக வெளியானது படையப்பா; கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் நடித்திருந்தார். இதுவே சிவாஜியின் கடைசிப் படமாகும்.
25. ஆசியாவில் ஜாக்கி சானுக்குப் பின்னர் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
26. படங்களில் நடிப்பதற்காக மட்டுமே மேக்கப் போடும் ரஜினிகாந்த், பொது நிகழ்ச்சிகளிலும் பயணங்களிலும் மேக்கப் இல்லாமல் தான் வலம் வருவார்.
27. திரைப்படங்களில் பஞ்ச் வசனங்கள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாக சூப்பர் ஸ்டார் ரஜினியே முன்னோடியாக இருந்தார்.
28. ரஜினியின் ஸ்டைலைப் போல, அவரது பஞ்ச் வசனங்களுக்கும் ரசிகர்களிடம் செம கிரேஸ் உள்ளன.
29. 1980களில் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டிய ரஜினி, 1990களில் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மன்னனாக
கெத்து காட்டினார்.
30. 1990 முதல் 99 வரை வெளியான தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா போன்ற படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தன.
31. ரஜினி – கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான முத்து திரைப்படம், ஜப்பான் நாட்டில் அதிரி புதிரியாக ஹிட்டானது.
32. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கரியரில் ரசிகர்களால் அதி உச்சமாக கொண்டாடப்பட்ட ஒரே திரைப்படம் பாட்ஷா.
33. இந்தியாவில் கறுப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் என அனைத்து வகையான படங்களிலும் நடித்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே.
34. வள்ளி, பாபா ஆகிய இரண்டு படங்களுக்கும் ரஜினியே கதை எழுதினார். ஆனால், இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய தோல்வியைத் தழுவின.
35. மன்னன் படத்தில் இடம்பெற்ற ‘அடிக்குது குளிரு’, கோச்சடையான் படத்தில் வரும் ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ பாடல்களின் சிறு பகுதியை, ரஜினி பாடியுள்ளார்.
36. ரஜினியின் ஃபேவரைட் ஸ்பாட் இமயமலை; ஒவ்வொரு படங்களின் ஷூட்டிங் முடிந்ததும் இமய மலைக்கு ஆன்மிக பயணம் செல்வது ரஜினியின் வழக்கம்.
37. ரஜினி பேசும் போது அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘சூப்பர்’. யாரை பாராட்டினாலும் வார்த்தைக்கு வார்த்தை ‘சூப்பர்... சூப்பர்’ என அவர்களை உற்சாகப்படுத்துவார்.
38. கார்களின் பிரியரான ரஜினி, தான் முதன்முறையாக வாங்கிய ஃபியட், அதன்பின்னர் வாங்கிய அம்பாசிடர் கார்களை இன்று வரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.
39. காரில் ஷூட்டிங் ஸ்பாட் போகும் போது, அதனை ரஜினியே ஓட்டிச் செல்வாராம். தற்போது BMW, Aston Martin போன்ற சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
40. சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ரஜினியின் வாய்ஸ் ஒலிக்கத் தொடங்கியது; அதன்படி 1996ம் ஆண்டு திமுக, தமாக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார்.
41. 1996 தேர்தலில் அதிமுக ஜெயித்தால், இனிமேல் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என பகிரங்கமாக கூறினார் ரஜினிகாந்த்.
42. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
43. தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவுக்கு எதிராக, 2002ம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரம் இருந்தார் ரஜினிகாந்த்.
44. 2008ம் ரஜினி ரசிகர்களே தனிக் கட்சி ஆரம்பித்து அவரை அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், ரஜினியோ அதனை மறுத்துவிட்டார்.
45. 2017ம் ஆண்டு மீண்டும் அரசியல் பற்றி பேசி புயலை கிளப்பினார் ரஜினிகாந்த். ஆனால், 2018ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியல் பேசாமல் அமைதியாகிவிட்டார்.
46. அதன்பின்னர் 2020ல் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவேன் எனக் கூறிவிட்டு, அதேவேகத்தில் தனது அறிவிப்பை வாபஸ் வாங்கிக்கொண்டார்.
47. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 3 ரசிகர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். அப்போது முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டார் ரஜினி.
48. ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்த முதல் நாளிலேயே அவரை 1.5 லட்சம் பேர் ஃபாலோ செய்யத் தொடங்கினர். இந்திய நடிகர் ஒருவருக்கு முதல் நாளில் இவ்வளவு ஃபாலோயர்ஸ் வந்தது இதுவே முதன்முறை.
49. இயக்குநர் ஷங்கர் ரஜினிக்காக எழுதிய ஜென்டில்மேன், முதல்வன் படங்களில், அர்ஜூன் ஹீரோவாக நடித்தார்.
50. அதேபோல், ரஜினிக்காக ஷங்கர் எழுதிய இந்தியன் படத்தில் கமல்ஹாசனும், ஷங்கர் கமலுக்காக எழுதிய எந்திரன் படத்தில் ரஜினியும் மாறி மாறி நடித்தனர்.
51. கோலிவுட்டின் புகழ்பெற்ற ஏவிஎம் ஸ்டூடியோவில், ரஜினி தங்குவதற்காக தனி அறை உள்ளது. படப்பிடிப்பு நேரங்களில் அங்கு தங்குவது வழக்கம்.
52. 2010ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா தேர்ந்தெடுத்த, அதிக செல்வாக்கு மிக்க இந்தியர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி தேர்வாகியிருந்தார்.
53. இந்திய அரசு சார்பில், பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகள் ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ளன.
54. படப்பிடிப்பு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், சரியான நேரத்துக்கு சென்றுவிடுவது ரஜினியின் பாலிஸி.
55. எந்திரன் படத்தின் வணிக ரீதியான வெற்றி குறித்து, அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது.
56. அதேபோல் ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
57. ஆரம்பத்தில் தனது வெற்றிக்கு காரணமாக இருந்த இயக்குநர்களுக்கு, குறைந்த சம்பளத்தில் படங்கள் நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
58. அதேபோல், தனது நண்பர்களுக்காகவும் படங்கள் நடித்துகொடுத்து, அதன் மூலம் கிடைத்த லாபத்தை அவர்களுக்கே பகிர்ந்தளித்துள்ளார்.
59. ஆரம்ப காலத்தில் ரஜினியை பேட்டி எடுக்கச் சென்ற லதா, பின்னாளில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக மாறினார்.
60. தனக்கு ஆரம்ப காலத்தில் உதவிய நண்பர் ராஜ் பகதூருடன் இப்போதும் அதே நட்புடன் பழகி வருகிறார் ரஜினிகாந்த்.
61. தனது இளமைகால நண்பர்களை அடிக்கடி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதும், அவர்களுக்கு உதவுவதும் ரஜினியின் வழக்கம்.
62. ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரும், சினிமாவில் இயக்குநர்களாக வலம் வருகின்றனர்.
63. பொன்னியின் செல்வன் கதையில் தான் நடித்திருந்தால், அதில் வரும் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஜினி விரும்பினார்.
64. ரஜினியுடன் கமல், பிரபு, சத்யராஜ் உட்பட பல சீனியர் நடிகர்கள் இணைந்து நடித்திருந்தாலும், விஜயகாந்த் மட்டுமே இந்த லிஸ்ட்டில் இடம்பெறவில்லை.
65. தமிழில் 70 வயதை கடந்த பின்னரும் இப்போது வரை ஹீரோவாக மட்டும் நடிக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்.
66. தமிழில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே.
67. தன்னைப்பற்றி எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும், அதற்கு விளக்கம் கொடுக்காமல் சிரித்தபடி அதனை கடந்து செல்வது ரஜினியின் வழக்கம்.
68. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி பேசியது பெரும் சர்ச்சையானது.
69. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை சூட்டியது, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
70. ஜெயிலர் பட விழாவில் தனது சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் ரஜினிகாந்த்.
71. சூப்பர் ஸ்டார் பட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றும், அதனை நானாக விரும்பி வைத்துக்கொள்ளவில்லை எனவும் ஓபனாக பேசினார்.
72. ஹாலிவுட்டில் புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல, ரஜினிக்காக ‘சூப்பர் ஸ்டார்’ தீம் மியூசிக்கை கம்போஸ் செய்தவர் தேவா.
73. ரஜினியின் அண்ணாமலை படத்தில், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் தீம் மியூசிக் இடம்பெற்றது. இது இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
74. திரையுலகில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர், உலக நாயகன் கமல்ஹாசன் தான்.
75. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, இதுவரை விடையே கிடைக்காமல் இருப்பது தான், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனித்துவம், மகத்துவம்.
What's Your Reaction?