Actor Surya Kanguva Movie First Single : சூர்யாவின் பிறந்தநாளை(Surya Birthday) முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள கங்குவா 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதேநேரம் கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தி பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்குவா இரண்டாம் பாகத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் அவரது என்ட்ரி இருக்கும் வகையில் காட்சிகளை வைத்துள்ளாராம் இயக்குநர் சிவா. அதன்படி, சூர்யா, கார்த்தி இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படமாக கங்குவா உருவாகிறது. இந்த நிலையில் தான் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே’ எனத் தொடங்கும் இப்பாடலை விவேகா எழுதியுள்ளார். விஎம் மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ், தீப்தி சுரேஷ் இணைந்து பாடியுள்ள இப்பாடல், நிஜமாகவே ஃபயர் மோடில் உருவாகியுள்ளது.
கங்குவா படத்தில் முதல் பாடல் முழுக்க முழுக்க விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதேபோல் கிராபிக்ஸ், சூர்யாவின் டான்ஸ் ஆகியவையும் மிரட்டலாக வந்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் விவேகாவின் பாடல் வரிகளும் இலக்கியத் தமிழில் அமைந்துள்ளதோடு, ஒரு சமூகத்தின் போர் பாடல் போல உருவாகியுள்ளது. கங்குவா படத்தின் 70 சதவீத பகுதிகள் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நிகழ் காலத்தில் இருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் வரலாற்றை தேடும் விதமான கதையாக கங்குவா படத்தை இயக்கியுள்ளாராம் சிவா.
இந்த இரண்டு காலக்கட்டங்களையும் செம ஃபேண்டஸியாக திரையில் கொண்டு வந்துள்ளதாம் படக்குழு. முக்கியமாக கங்குவா படத்தின் கிராபிக்ஸ் ஒர்கிற்காக மட்டுமே பல கோடிகளை செலவழித்துள்ளதாம் ஸ்டூடியோ க்ரீன். சூர்யாவின் கேரியரில் கங்குவா தான் ஹை பட்ஜெட் மூவி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக இருந்தது. இப்போது கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிளையும் அதே ஃபயர் மோடில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஃபயர் ட்ரீட் கொடுத்துள்ளது சிவா & டீம்.
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கோலிவுட்டில் ரீ-என்ட்ரியாகியுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் தரமாக கம்பேக் கொடுத்துள்ளார். இவரது இசையில் அஜித்தின் குட் பேட் அக்லி, தனுஷின் குபேரா ஆகிய படங்களும் உருவாகி வருவதால், கங்குவா முதல் பாடலை வெறித்தனமாக களமிறக்கியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத் என சூர்யா ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சூர்யா 44 கிளிம்ப்ஸ் வீடியோவை தொடர்ந்து கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிளும் சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.