சென்னை: ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் அஜித்குமார், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் 'குட் பேட் அக்லி' அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. விடாமுயற்சியின் ரீலிஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம். கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்களில் பங்கேற்பதில் அவர் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் ஈடுபட உள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது 2025ம் ஆண்டு நடக்க உள்ள European GT championship கார் பந்தய போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும்விதமாக பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஐரோப்பிய ஜிடி ரேஸிங் போட்டியில் அஜித் பங்கேற்க உள்ளார். அவர் உண்மையில் ஒரு லெஜண்ட். கார் பந்தயத்தில் அனுபவம் இல்லை என்றாலும், கேரியரை தாமதாமாக தொடங்கினாலும் கார் ரேஸிலும் அஜித் தனித்துவமிக்கவர்.
கடந்த 2010ம் ஆண்டு அவர் FIA F2 கார் ரேஸில் அவர் பங்கேற்றபோது வெற்றியிடம் இருந்து அவர் வெகு தொலைவில் இல்லை என்பது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அஜித்தின் திறமைக்கு எல்லையே இல்லை. அவர் சிறந்த மனிதநேயர். ஆல் தி பெஸ்ட் தல. கார் பந்தயத்தில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் அது எனக்கு பாக்கியமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.
அஜித்குமார் அண்மை காலமாக சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளார். சமீபத்தில் போர்ச் ஜிடி 3 என்ற சொகுசு காரை அவர் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்குமார் மீண்டும் கார் ரேஸூக்கு திரும்ப இருப்பதை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.