டைம் டிராவல் 2024: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை..2024ல் சினிமா உலகில் நடந்த சுவாரஸ்ய மற்றும் சோக சம்பவங்கள்...

கோலிவுட்டில் அதிகரிக்கும் கிரே டைவர்ஸ், நெகட்டிவ் விமர்சனங்களால் பந்தாடப்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, திரையுலகில் இந்தாண்டு பல சுவாரஸ்யங்களும் சோகங்களும் நடந்துள்ளன. அதன் தொகுப்பை இப்போது பார்க்கலாம்....

Dec 31, 2024 - 22:00
Dec 31, 2024 - 21:42
 0
டைம் டிராவல் 2024: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை..2024ல் சினிமா உலகில் நடந்த சுவாரஸ்ய மற்றும் சோக சம்பவங்கள்...

1.    2024 பொங்கல் ஸ்பெஷலாக தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 


2.    இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி, ஜனவரி 26ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் காலமானார். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது பவதாரிணியின் “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடலை அவரது குடும்பத்தினர் பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


3.    ஜன. 27ம் தேதி நடைபெற்ற லால் சலாம் பட விழாவில், விஜய் எனக்கு போட்டி என நினைத்தால், அது எனக்கு மரியாதை கிடையாது. நானும் விஜய்யை போட்டியாக நினைத்தால் அவருக்கு மரியாதை இல்லை என பேசி பரபரப்பை கிளப்பினார் ரஜினிகாந்த். ஜெயிலர் பட விழாவில் தான் பேசிய காக்கா – கழுகு கதையால் எழுந்த சர்ச்சைக்கு, சூப்பர் ஸ்டாரே ஃபுல்ஸ்டாப் வைத்தது குறிப்பிடத்தக்கது. 


4.    கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய், பிப்.2ம் தேதி தனது அரசியல் கட்சியை முறைப்படி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், இனிமேல் அரசியல் மட்டுமே தனது வேட்கை எனவும் அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார்.


5.    பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே, பிப்.2-ம் தேதி கர்பப்பை வாய் புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில், ஓரிரு தினங்களில் “நான் உயிரிழக்கவில்லை, கர்ப்பப்பை வாய் கேன்சர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படி பொய்யான தகவல் பரப்பியதாக” வீடியோ வெளியிட்டு அதிர்ச்சிக் கொடுத்தார்.   


6.    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் திரைப்படம், பிப் 9ம் தேதி ரிலீஸானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரஜினிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கின் போது, ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதும், இப்போது வரை இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸாகாமல் இருப்பதும், படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.


7.    த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ தெரிவித்த கருத்து, மிகப்பெரிய சர்ச்சையானது. 2017-ம் ஆண்டு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, அவர்களுக்கு மது, பெண்கள் என அனைத்தும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதில் த்ரிஷாவுக்கும் சம்மந்தம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு திரைத்துறையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.


8.    மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், கேரளா மட்டுமின்றி, தமிழகத்திலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கமலின் குணா படத்தில் இடம்பெற்ற, ‘கண்மணி அன்போடு காதலன்” பாடலை, மஞ்சும்மல் பாய்ஸில் பயன்படுத்தியிருந்தனர். அதுவே இந்தப் படம் சூப்பர் ஹிட் அடிக்க காரணமாக அமைந்தது. 


9.    பிரபல சின்ன திரை நடிகரும், மேடை நாடக கலைஞருமான ‘அடடே’ மனோகர் பிப்ரவரி 28ம் தேதி காலமானார். சுமார் 3500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ள மனோகர், 6 நாடகங்களை அவரே இயக்கியிருந்தார். இந்நிலையில் உடல்நிலை காரணமாக பிப்.28ம் தேதி அவர் உயிரிழந்தார் 


10.    கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், மார்ச் 6-ம் தேதி திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவரின் காதுக்கு கீழே சின்னதாக பல்ஜ் எனப்படும் புடைப்பு இருந்தது. இதனையடுத்து மைனர் சர்ஜரி மூலம் அது சரி செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் வீடு திரும்பினார் அஜித்.


11.    பிரபல டிராகன் பால் கார்ட்டூன் தொடர் மூலம் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிரா டொரியமா, மூளை அருகே ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது 68வது வயதில் உயிரிழந்தார். 1984 முதல் 1995ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான டிராகன் பால், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கார்ட்டூன் தொடராக கொண்டாடப்பட்டது.


12.    இந்தாண்டு நடைபெற்ற 96வது ஆஸ்கர் விருதுகள் விழாவில், கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹெய்மர் திரைப்படம், அதிகபட்சமாக 7 விருதுகளை வென்றது. அதனையடுத்து புவர் திங்ஸ் (Poor Things) படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பார்பி (Barbie) படத்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.


13.    கோட் படத்தின் படப்பிடிப்புக்காக, சென்னையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு, விமான நிலையத்தில் மலையாள ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். மலையாள ஹீரோக்களுக்கு கூட இப்படியொரு கூட்டம் கூடியது இல்லை என மல்லுவுட் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது.  


14.    இசைஞானி இளையராஜாவின் பயோ பிக், ‘இளையராஜா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக மார்ச் 20ம் தேதி அறிவிப்பு வெளியானது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இப்படத்தின் இயக்குநராக கமிட்டானார். ஆனால், தற்போது இந்தப் படம் உருவாகிறதா இல்லை ட்ராப் ஆகிவிட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது. 


15.    கோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக வலம் வரும் டாப்ஸிக்கு, மார்ச் 23ம் தேதி திருமணம் நடைபெற்றது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்ட்டன் வீரரான மத்தியாஸ் போ-வை காம்பிடித்தார் டாப்ஸி. மத்தியாஸ் போ, இந்திய பேட்மிண்டன் லீக்கில் விளையாட வந்த போது டாப்ஸியுடன் காதல் மலர, அது திருமணத்தில் முடிந்தது.


16.    லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சேசு, மார்ச் 26ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சந்தானத்துடன் பல படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமான சேசு, பட வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கிய நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


17.    நடிகர் டேனியல் பாலாஜி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த நடிகர் முரளியின் உறவினரான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை உட்பட பல படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் பிரபலமானார். இளம் வயதிலேயே டேனியல் பாலாஜி உயிரிழந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. 


18.    மலையாள நடிகை அபர்ணா தாஸ், நடிகர் தீபக் பரம்போல் திருமணம் ஏப்.24ம் தேதி நடைபெற்றது. பீஸ்ட், டாடா படங்களில் நடித்து தமிழில் பிரபலமான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் பிரபலம் தீபக் பரம்போல் இருவருமே நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 


19.    பல தசாப்தங்களை கடந்தும் இளையராஜா – வைரமுத்து பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வரவில்லை. தான் இசையமைத்த பாடல்களுக்கு இளையராஜா காப்புரிமை கோரிய நிலையில், இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல் என இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்தார் வைரமுத்து. இதனையடுத்து வைரமுத்துவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கங்கை அமரன், இனிமேல் இளையராஜா பற்றி குறைகளோ குற்றமோ சொல்வதாக இருந்தால், அதற்குரிய விளைவுகளை வைரமுத்து வேறுமாதிரி சந்திக்க வேண்டியிருக்கும் என பேசி பரபரப்பை கிளப்பினார்.


20.    மே 2ம் தேதி பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் தனது 69வது வயதில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமான உமா ரமணன், மேலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.


21.    ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியினர், திருமண உறவில் இருந்து பிரிவதாக மே 14ம் தேதி அறிவித்தனர். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி, காதலித்து திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி. இருவருமே இசைத்துறையில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், விவாகரத்து செய்துகொண்டனர்.


22.    மாணிக்கம், மாயி, திவான் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பு காரணமாக மே 27ம் தேதி உயிரிழந்தார். ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சூர்ய பிரகாஷுக்கு, மாயி, திவான் போன்ற படங்கள் தவிர போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 


23.    பான் இந்தியா அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபஹத் பாசில், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ADHD என்பது கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு என சொல்லப்படுகிறது. இதில் பாதிப்படைந்த ஒருவர், கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதேபோல் ADHD பாதிப்பு பொதுவாக குழந்தை பருவத்தில் கண்டறியப்படுவது தான் வழக்கம். 


24.    சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு ஜூன் முதல் வாரத்தில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டிக்குப் பின்னர், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதி இடையே குடும்ப தகராறு என செய்திகள் பரவின. ஆனால் அது வெறும் வதந்தி என சிவகார்த்திகேயன் நிரூபித்தார்.


25.    ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் ஜூன் 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. உமாபதியும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், இருவரது குடும்பத்தினரும் க்ரீன் சிக்னல் கொடுக்க, மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இவர்களது திருமணம்.


26.    கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தோழியும் நடிகையுமான பவித்ராவுக்கு, தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி செல்போனில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமான தர்ஷன், தனது ரசிகரை கொடூரமாக கொலை செய்து கைதானார்.


27.    தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள பிரதீப் கே விஜயன், ஜூன் 13ம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தெகிடி, டெடி, லிஃப்ட், இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் பிரதீப் கே விஜயன். ஓரிரு நாட்களாக பிரதீப் கே விஜயன் வீட்டை விட்டு வெளியே வராததால், போலீஸார் உதவியோடு கதவை உடைத்து பார்க்கப்பட்டது. அப்போது அவர் குளியலறையில் தலையில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.


28.    பிரபாஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கல்கி 2898 AD திரைப்படம், ஜூன் 27ம் தேதி வெளியானது. பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகேன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரத்து 200 கோடிக்கும் மேல் கலெக்ஷன் செய்தது.


29.    நடிகை வரலட்சுமி சரத்குமார் – நிக்கோலாய் சச்தேவுக்கு ஜூலை 2-ம் .தேதி திருமணம் நடைபெற்றது. சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். விஷால் – வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், க்ளைமேக்ஸில் நிக்கோலாய் உடன் திருமணம் நடைபெற்றது.  


30.    கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம், ஜூலை 12ம் தேதி ரிலீஸானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், நெகட்டிவான விமர்சனங்களால் படுதோல்வி அடைந்தது. 


31.    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன். கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த 2 ஆண்டுகளாக பல சர்ச்சைகளை சந்தித்தார். இந்நிலையில், திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற, அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதி கமிட்டானார். 


32.    ஆக.16ம் தேதி, 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பார்ட் 1, சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் டிசைன், சிறந்த பின்னணி இசை என மொத்தம் 4 விருதுகளை வென்றது. 


33.    பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக, ஏஆர் ரஹ்மான் தேசிய விருது வென்றார். இது அவரது 7வது தேசிய விருது என்பதோடு, இந்தியாவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார்.


34.    சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு வென்றார். சிறந்த நடிகைக்கான விருது, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் வென்றது குறிப்பிடத்தக்கது. 


35.    மலையாள திரையுலகில், நடிகைகளால் முன்வைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு செய்ய, நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து ஹேமா கமிட்டி. சமர்பித்த அறிக்கையில், நடிகைகள் மீதான பாலியல் துன்புறத்தல் பற்றிய தகவல்கள் பெரும் புயலை கிளப்பின. 


36.    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர், கோலிவுட்டிலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்தனர். இதனால் தமிழ் சினிமாவிலும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 


37.    பிரபல ஹாலிவுட் பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ், நடிகரும் தயாரிப்பாளருமான பென் அஃப்லெக் தம்பதியினர், இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். பென் அஃப்லெக்கிடம் இருந்து எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என ஜெனிஃபர் லோபஸ் கூறியிருந்தார். ஜெனிஃபர் லோபஸ்-க்கு இது நான்காவது திருமணமும், பென் அஃப்லெக்கிற்கு இது இரண்டாவது திருமணமும் ஆகும்.


38.    சூரியின் கொட்டுக்காளி படத்தை விளம்பரப்படுத்த, நிர்வாணமாக டான்ஸ் ஆடவும் ரெடி என இயக்குநர் மிஷ்கின் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது. மிஷ்கினின் இந்த ஸ்டேட்மெண்ட்டால் ஷாக்கான ரசிகர்கள், சாரே நீங்க நிர்வாணமா டான்ஸ் ஆடுனா.. யார் தான் பார்ப்பாங்க என வெரைட்டியாக கமெண்ட்ஸ் போட்டு மிஷ்கினை ட்ரோல் செய்தனர்.


39.    கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தனுஷை வம்பிழுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. “சினிமாவில் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதால், நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன் என எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னையும் அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டாங்க. ஆனால் அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது”என பேசி சர்ச்சையை கிளப்பினார் சிவகார்த்திகேயன்.


40.    பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், ஹெயிலி பீபர் தம்பதிக்கு ஆகஸ்ட் 24ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ஜேக் புளூஸ் பீபர் எனப் பெயர் சூட்டியுள்ளனர். ‘பேபி’ என்ற இசை ஆல்பம் மூலம் 13 வயதிலேயே உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தவர் ஜஸ்டின் பீபர். இவர் கனடா நட்டைச் சேர்ந்தவர். 


41.    பிரபல நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை ரேவதி சம்பத் என்பவர், ரியாஸ் கான் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் ஆபாசமாகப் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் ரேவதி சம்பத்தின் தோழிகளை தனக்கு அறிமுகம் செய்யும்படியும் ரியாஸ் கான் கேட்டதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரியாஸ் கான் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


42.    ஹேமா கமிட்டியின் அறிக்கை புயலை கிளப்பிய நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். 


43.    செப்.5ம் தேதி விஜய் நடித்த தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்த தி கோட், பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.


44.    பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியினருக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் பெண் குழந்தை பிறந்தது. ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், குழந்தை பிறந்தது. இதனால் இவர்களது பிரிவு வெறும் வதந்தியாகிப் போனது.


45.    பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு, செப்டம்பர் 9ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். உறுமீன், மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர், கள்வன் என வித்தியாசமான படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. மேலும் சில படங்களை தயாரித்து வந்த நிலையில், லிவர் கேன்சர் பாதிப்பால் காலமானார். 


46.    செப்டம்பர் 9ம் தேதி, ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காத ஜெயம் ரவி, திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தது திரையுலகையே அதிர வைத்தது. ஆனால், இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட விருப்பம், விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறியிருந்தார் ஆர்த்தி. இருப்பினும் இப்போது ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி பிரிவது உறுதியாகியுள்ளது.


47.    ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி பிரிவதற்கு காரணமே பிரபல பின்னணி பாடகி கெனிஷா தான் என, ஒரு தகவல் வைரலானது. ஆனால் அதனை மறுத்த ஜெயம் ரவி, இந்தச் சம்பவத்தில் யாருடையை பெயரையும் குறிப்பிட வேண்டாம் என விளக்கம் கொடுத்தார். 


48.    சித்தார்த் – அதிதி ராவ் ஹைதரி இருவரும், செப். 16ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தெலங்கானாவில் வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில், இருவரது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். சித்தார்த் – அதிதி ராவ் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.


49.    மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்த கார்த்தி, திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. இதனையடுத்து கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அட்வைஸ் செய்ய, அதற்கு உடனே மன்னிப்புக் கேட்டு பஞ்சாயத்தை முடித்து வைத்தார் கார்த்தி. ஆனாலும் இச்சம்பவத்தை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். 


50.    தான் உரிமை வாங்கியுள்ள ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகளை, எனது அனுமதியின்றி வேறு யாரும் படமாக்கினால் சட்டபடி நவடிக்கை எடுப்பேன் என இயக்குநர் ஷங்கர் எச்சரித்தது பரபரப்பை கிளப்பியது. தேவாரா, கங்குவா படங்களை தான் ஷங்கர் மறைமுகமாக எச்சரித்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர்.  


51.    தனது குழுவில் பணியாற்றிய நடன கலைஞரான இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனால் அவருக்கு வழங்கப்படவிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டதுடன், கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


52.    செப்டம்பர் 28ம் தேதி, ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித். தனது 89-வது வயதில் காலமானார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை மேகி ஸ்மித். ஹாரி பாட்டர் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 


53.    அக்.1ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அடி வயிறு வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட சில பிரச்னைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டன்ட் (Stent) பொருத்தப்பட்டது. 


54.    பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது ரிவால்வர் துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, அது தவறுதலாக வெடித்து கோவிந்தாவின் காலில் காயம் ஏற்பட்டது.  


55.    சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு, தெலங்கான அமைச்சர் கேடி.ஆர்.ராமராவ் தான் காரணம் என, அமைச்சர் கொண்டா சுரேக பேசியது டோலிவுட்டையே அதிர வைத்தது. போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர்.ராமாராவ், பல பார்டிகள் நடத்துவதாகவும், அதில் பங்கேற்க வேண்டும் என சமந்தாவை மிரட்டியதாகவும் கூறியிருந்தார். அதோடு, அமைச்சருக்கு சப்போர்ட்டாக நாகர்ஜுனா செயல்பட்டதாகவும், அதனால் தான் சமந்தா விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் பேசியிருந்தார்.


56.    அடிக்கடி பைக் டூர் செல்லும் அஜித், அதற்கான காரணத்தை முதன்முறையாக ரசிகர்களிடம் வீடியோவாக வெளியிட்டு பகிர்ந்துகொண்டார். அதில், மதமும் சாதியும் மக்களை வெறுக்க வைக்கும். பயணம் மக்களை பற்றி அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள உதவும் என எமோஷனலாக பேசியிருந்தார்.


57.    சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம், அக்டோபர் 31ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஆனாலும், காஷ்மீர் விவகாரத்தை குறிப்பிட்டு அமரன் படம் மீது நெகட்டிவான விமர்சனங்கள் வெளியானதோடு, படத்தை தடை செய்யவும் போராட்டங்கள் நடந்தன.  


58.    நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ திடீரென வைரலானது திரையுலகையே பதற வைத்தது. ஆனாலும் இதற்கெல்லாம் அசராத ஓவியா, “உங்க வீடியோ வந்துருக்கே” என கமெண்ட் போட்ட ரசிகருக்கு, “என்ஜாய்” என தக் லைஃப் பதில் கொடுத்து அல்டிமேட் சம்பவம் செய்தார்.


59.    பிரபல நடிகர் டெல்லி கணேஷ், நவம்பர் 10ம் தேதி காலமானார். 10 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் வேலை பார்த்துவிட்டு, நடிப்பின் மீதான ஆர்வத்தால் சினிமாவில் என்ட்ரியானார். காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடித்த டெல்லி கணேஷ் மறைவு, திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்தது.


60.    இனிமேல் என்னை உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியிருந்தார். ‘கமல்ஹாசன்’ என்றோ ‘கமல்’ என்றோ அல்லது ‘KH’ என குறிப்பிட்டால் போதும், உலக நாயகன் பட்டம் வேண்டாம் என கமல்ஹாசன் கூறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 


61.    சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி, மிக மோசமான நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இந்தியன் 2-வை தொடர்ந்து கங்குவா படமும் யூடியூப் விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. இதனால் யூடியூப் விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் போர் கொடி தூக்க, அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 


62.    பிரபல இயக்குநர் சுரேஷ் சங்கையா நவம்பர் 16ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை படங்களை இயக்கியுள்ள சுரேஷ் சங்கையா, மஞ்சள் காமாலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.


63.    தனுஷ் மீதான நயன்தாராவின் குற்றச்சாட்டு, கோலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நயன்தாராவின் பயோபிக் டாக்குமெண்ட்ரி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதில் நானும் ரவுடி தான் படத்தின் பாடல் காட்சிக்காக, தயாரிப்பாளர் தனுஷிடம் என்.ஓ.சி கேட்டிருந்தார் நயன். ஆனால், தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை. அதோடு, அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நயனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ். 


64.    நவம்பர் 19ம் தேதி,, ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கிசுகிசுகளுக்கும் ஏஆர் ரஹ்மானுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. அதேபோல் பழகுவதிலும் அவ்வளவு மென்மையானவர். அப்படியான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கே இந்த நிலையா என அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.


65.    தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில், நவம்பர் 28ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தனுஷ், ஐஸ்வர்யா 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்த நிலையில், கடந்த 6 மாதம் முன்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து இவர்களது திருமணம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.


66.    நாக சைதன்யா – சோபிதா துலிபலா ஜோடிக்கு டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற்றது. சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா, இரண்டாவதாக சோபிதா துலிபலாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு ஒரிரு தினங்களுக்கு முன்னர் சமந்தாவின் தந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


67.    முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது நீண்டநாள் நண்பன் ஆண்டனியை டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டார். கோவாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில், விஜய், த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow