புஷ்பா-2 விவகாரம்.. அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு
'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. அப்போது திரையரங்கிற்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண்பதற்காக அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் இளம் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இவரது எட்டு வயது மகன் தலையில் படுகாயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, தெலுங்கானா சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன், ரோட் ஷோ நடத்தியதாகவும், இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன், தனக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், கூட்டத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அடுத்த நாள் தான் தனக்கு தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து, 'புஷ்பா -2’ திரைப்படம் திரையிடலின் போது பெண் உயிரிழந்த தகவலை தெரிவித்தும் நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கை விட்டு வெளிவரவில்லை என சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் ஹைதராபாத் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதாவது, பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் தெரிவிக்க சென்றபோது திரையரங்க நிர்வாகம் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மூத்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்ததாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு இதுகுறித்து அவரிடம் தெரிவித்த போது அல்லு அர்ஜுன் படம் முடிந்து செல்வதாக கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நீதி கேட்டு அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர், அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், வீட்டின் மீது தக்காளிகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். “ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர் அல்லு அர்ஜுன் இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் பிணைத்தொகை செலுத்தியதால் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
What's Your Reaction?