தாய் மற்றும் சகோதரிகளை கொடூரமாக கொன்ற இளைஞர்.. கைது செய்த போலீஸ்
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் புடான் (Budaun) பகுதியில் வசித்து வந்த அர்ஷத் என்ற இளைஞர் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அர்ஷத் உணவில் மது கலந்து கொண்டு தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளின் கையை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அர்ஷத் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் இருக்கும் இடத்தை அருகில் இருப்பவர்களும் நில மாஃபியாக்களும் ஆக்கிரமித்துவிட்டனர். 15 நாட்களாக வழிப்பாதையில் குளிரில் தூங்குகிறோம். எங்கள் துயரம் குறித்து கூறியும் யாரும் அதை செவி கொடுத்து கேட்கவில்லை. எங்கள் வீட்டை அபகரித்தவர்கள் என் தந்தை மற்றும் என்னை பொய் வழக்கில் சிறையில் அடைத்துவிட்டு என் தாய் மற்றும் தங்கைகளை விற்று விடலாம் என்று நினைத்தனர். அதனால் தான் நான் என் தங்கை மற்றும் தாயை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இறந்து கிடக்கும் தனது தாய் மற்றும் சகோதரியின் உடலை காண்பித்து நானும் நாளை உயிருடன் இருக்கமாட்டேன் என்று அர்ஷத் கூறினார். மேலும், அவர் எங்களுக்கு வாழ்க்கையில் தான் நீதிக்கிடைக்கவில்லை மரணத்திலாவது நீதிக்கிடைக்கட்டும் என்று கூறிவிட்டு ஒரு சிலரின் பெயரை கூறி அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து, எங்கள் நிலத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்றும் எங்கள் உடமைகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அர்ஷத்தை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர்கள் அர்ஷத்தின் தாய் அஸ்மா, மற்றும் 9, 16,18, 19 வயது சகோதரிகள் என்று தெரியவந்திருக்கிறது. குற்றம் நடந்த இடத்தில் தடவியல் குழு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ மத்திய பகுதி துணை காவல் ஆணையர் (டிசிபி) ரவீணா தியாகி, "லக்னோவில் உள்ள நாகா பகுதியிலிருக்கும் ஷராஞ்சித் ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொலைக்குற்றவாளி அர்ஷத் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் போலீஸார் குற்றாவளியைக் கைது செய்தனர்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?