புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆங்கில புத்தாண்டை இன்று வெகு விமர்சையாக கொண்டாடினர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சென்னையில் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க அரசு தடை விதித்திருந்தது.
இளைஞர் பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் வண்ணம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மெரினா, இசிஆர் போன்ற கடற்கரைகளில் இரவு 7 மணிக்கு மேல் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்னை காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஓட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
மேலும், சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன சாகசங்களை கட்டுப்படுத்தும் விதமாக 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்து 242 இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். சென்னை மாநகரப் பகுதிகளில் இருந்தும் புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் புத்தாண்டு விடுமுறை தினத்தை கழிப்பதற்காக கடற்கரையில் திரண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அந்த வகையில் மெரினா கடற்கரை பகுதிகளிலும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை பொதுமக்கள் குடும்பத்துடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
What's Your Reaction?