திமுக அரசை எதிர்த்து யாரும் பேச கூடாதா..? முதல்வர் பதில் கூற வேண்டும்.. சசிகலா
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். இதற்கான பதிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டாயமாக கூற வேண்டும் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தையொட்டி, தனது ஆதரவாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த சசிகலா, அவருடைய போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026-இல் ஜெயலலிதா ஆட்சி அமைப்பது தான் என்னுடைய இலக்கு. தமிழக மக்களுக்காக செய்ய வேண்டிய பொறுப்பு பல உள்ளது. அதனை நிறைவேற்றுவது எனது முழு நேர பணியாக இருக்கும்.
இந்த ஆண்டு அதிமுகவில் பிரிந்துள்ள அணிகள் எல்லாம் இணைய வாய்ப்புள்ளது. இணைப்புப் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகள் விரைவில் வரும். ஒவ்வொரு குற்ற நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம்தான் பொறுப்பு. அவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஆனால் அது போன்ற நடவடிக்கை மேற்கொள்வதாக அறியப்படவில்லை. திமுக ஆட்சி வந்த நாளிலிருந்து சட்டம், ஒழுங்கு மிக மோசமாக இருந்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை இந்த அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பிரச்னைக்கு தொடக்கம் துணை வேந்தர் இல்லாததுதான். துணைவேந்தர் இல்லாமல் இந்த பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டு வருகிறது. எனவே இதில் நடக்கும் தவறுகளுக்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். பல பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. எனவே முதல்வர் உடனடியாக துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் எதைச் சொன்னாலும் கைது செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து யாரும் பேச கூடாதா? ஜனநாயகத்தைப் பற்றி மேடைக்கு மேடை பேசுகிறார்கள் ஆனால் யாராவது ஏதாவது சொன்னால் கைது செய்கிறார்கள். முதலமைச்சர் ஆமை வேகத்தில் செயல்படுகிறார். இதுவே அம்மாவாக இருந்தால் நடப்பதே வேறு. டெல்லியில் இருந்து தேசிய மகளிர் ஆணையம் வந்து பார்க்கிறது ஆனால் தமிழக மகளிர் ஆணையம் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணே இந்த வழக்கு வேண்டாம் என்று பின் வாங்க வேண்டும் என்பதற்காக இந்த முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுகவிற்கு சம்பந்தம் இருக்கும் என பலரும் கூறுகிறார்கள். எனவே இதற்கான பதிலை முதல்வர் கட்டாயமாக கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் திராவிடம் என்று சொல்கிறார்கள். உங்கள் திராவிடத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியவில்லை. திராவிடத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள். இதை அனைத்து தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக 2026 மக்கள் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள்.
எங்க பார்த்தாலும் போதைப் பொருட்கள் இருக்கிறது. இதில் அரசாங்கத்திற்கு ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். நிதிநிலை சரியில்லை என்பதை இப்பொழுதுதான் இந்த அரசாங்கம் ஒத்துக்கொள்கிறது. ஆனால், நான் முன்பே சொன்னேன். எனக்கு 40 வருட அரசியல் அனுபவம் உள்ளது. நான் எதையும் சொல்ல மாட்டேன், செய்து காட்டுவேன். 40 வருடங்களாக இந்த கட்சியில் உள்ளேன் ஒரு தனிப்பட்ட முடிவு மற்ற கட்சிகளில் எடுக்கலாம், இந்த கட்சியில் எடுக்க முடியாது என்று கூறினார்.
What's Your Reaction?