பன்னாட்டு புத்தகத் திருவிழா! புத்தகப் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ்...
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் அரசு விழா நடைபெற்றது. நூலகர்களுக்கு "டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன் விருது", சிறந்த நூலகங்கள் மற்றும் வாசகர் வட்டங்களுக்கு கேடயம் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIDF) 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு தலைவர் மனுஷ்ய புத்திரன், சென்னை நூலக ஆணைய குழு தலைவர் கோபண்ணா, பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சோ.மதுமதி, பொது நூலக இயக்குனர் பொ.சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழை உலகிற்கும், உலக அளவில் இருக்கும் என்ற உன்னதமான நோக்கில் தமிழக அரசால் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2025 ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 2025 ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் மதிப்புறு விருந்தினராக (Guest of Honour) இத்தாலியைச் சேர்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் கலந்து கொள்ள உள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புத்தக திருவிழாவில் வெளியான 47 புத்தகங்களும் , 2024ஆம் ஆண்டு சர்வதேச புத்தக திருவிழாவில் வெளியான 88 தமிழ் புத்தகங்களும் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில் 50 நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள் , பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இதுபோன்ற பன்னாட்டு புத்தக திருவிழாவை நடத்திக் காட்டியது கிடையாது, நம்முடைய முதல்வர் ஆட்சி காலத்தில் நடந்து வருகிறது. சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளில் 86,44,190 பொது மக்கள் பார்வையிட்டு, அதில் ரூ.69.20 கோடி மதிப்பில் 81,44,525 நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பன்னாட்டு புத்தகவிழா எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் சிறப்பாக நடத்தி வருகிறோம். 2025ஆம் ஆண்டு நடைபெறும் புத்தக விழாவில் 50 நாடுகளை கலந்துகொள்ள வைப்பது, 1000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடத் திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரணமாக புத்தக விழா நடைபெறவில்லை. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்து இங்கு புத்தக விழா நடத்தி வருகிறோம். மொழிபெயர்ப்பு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். 1958 நூலகங்களில் ஃவைபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. புத்தகங்களை குழந்தைகளை போல் பார்த்து கொள்ளும் நூலகர்களுக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க போராடும் முதலமைச்சர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம்” எனக் கூறினார்.
What's Your Reaction?