அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?
அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று பருவங்களாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில், 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த 23-ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது.
இதையடுத்து டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் முடிவடைந்து ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக, அரையாண்டு, காலாண்டு போன்ற தேர்வுகள் முடிந்து விடுமுறைகள் அறிவிக்கப்படும் பொழுது இடையில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வேலை நாட்களாக இருந்தால் அரசு அதனையும் விடுமுறை நாட்களாக அறிவித்து தேர்வு விடுமுறைகளை நீட்டிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வியாழன், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருப்பதால் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளியை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.
விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி செல்ல தயாரான நிலையில் தற்போது விடுமுறை நீட்டிக்கப்படும் என்று வெளியான தகவல் மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் சென்றவர்களும் மகிழ்ச்சியாக ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?