தமிழ்நாடு

Union Budget 2024: பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!

''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Union Budget 2024: பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் என்ன?.. லிஸ்ட் போட்ட ஸ்டாலின்!
chief minister stalin about union budget

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று  வலுவான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது. 

இதற்கிடையே மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்றம் கடந்த 24ம் தேதி கூடியது.
இந்த கூட்டத்தின் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின்னர் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்களவையின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். 

இதன்பிறகு நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும், அக்னி பாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளையும் தொடந்து முடக்கினார்கள். பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவைவையில் பிரதமர் மோடியையும், பாஜகவையும் தாக்கி பேசியது நாடு முழுவதும் வைரலானது.

தொடர்ந்து பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்க, பெரும் களேபரத்துடன் நாடாளுமன்றம் நடந்து முடிந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22ம் தேதி) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் (ஜூலை 23ம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். நாளை மறுதினம் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு எதிர்பார்க்கும் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு பட்டியல் போட்டுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- 

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள #Budget2024 இல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், 

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல், உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.